– நமது நிருபர் -:
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், புற்றுநோய், இதய பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கு, உயர் ரக மருந்துகள் கிடைக்காததால், லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து, மருந்து வாங்க முடியாமல், நோயாளிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
உணவு முறை மாற்றம், பழக்க வழக்கம் போன்றவற்றால், புற்று நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
கடந்த 2012ம் ஆண்டில், 53,022 ஆக இருந்த புற்றுநோய் பாதிப்பு, படிப்படியாக அதிகரித்து, 2025ம் ஆண்டில், ஒரு லட்சத்து, 97 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் புற்றுநோயியல் துறை செயல்பட்டு வருகிறது.
இதில், கீமோதெரபி வாயிலாக, வேகமாக வளரும் புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து, அவற்றை செயல்படாமல் தடுத்தல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை துாண்டி, புற்றுநோய் செல்களை அழித்தல், ஹார்மோன்களை சமநிலைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு, உயிர்காக்கும் மருந்துகள் செலுத்தப்படுகின்றன.
இதற்கான தடுப்பு மருந்துகள், ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான ரூபாய் விலை உள்ளது. இம்மருந்துகள், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் மருத்துவமனைக்கான நிதி, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
3 மாதங்களாக இல்லை
இந்நிலையில், சென்னை, கோவை உள்ளிட்ட அரசு மருத்துவமனை டாக்டர்களால் பரிந்துரைக்கப்படும் உயர்ரக மருந்துகளை, மருத்துவமனை நிர்வாகமே கொள்முதல் செய்து தராமல், வெளியில் இருந்து வாங்கி பயன்படுத்த நோயாளிகளுக்கு அறிவுறுத்துகிறது.
இதனால், நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கான விலை உயர்ந்த மருந்தாக கருதப்படும், ‘போர்டெசோமிப்’ என்ற ஊசி மருந்து, கடந்த மூன்று மாதங்களாக இல்லை எனக் கூறி, நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ‘டீன்’ கீதாஞ்சலி கூறுகையில், ”உயிர்காக்கும் மருந்துகள் தேவைக்கேற்ப, இருப்பு வைக்கப்படுகின்றன. தற்போதைய தேவைக்கு, 50 ஊசி மருந்துகள், வெளி மருந்தகங்களில் வாங்கி பயன்படுத்தப்படும்,” என்றார்.
மக் கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இதயம், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு, உயர் ரக மருந்துகள், தேவைக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. அதிகளவு வழங்கினாலும், அவற்றின் பயன்பாடு காலம் முடிவடைந்தால், வீண் தான்.
எனவே, அந்தந்த மருத்துவமனையில், பேராசிரியர்களுக்கு தேவையான உயர்ரக மருந்துகள், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் வாயிலாக வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
