சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது, சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய, அமலாக்கத் துறைக்கு உத்தரவிடுமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., – எம்.பி., கிரிராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஆர்.காமராஜ், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ஆர்.இளங்கோவன் மற்றும் தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா ஆகியோர் மீது, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என, மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதன் விபரம்:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு; பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், 2021, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது.
இதுதொடர்பான புகார்களுக்கு தகுந்த ஆவணங்கள், லஞ்ச ஒழிப்புத் துறை வசம் உள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறை சேகரித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையால் வழக்கு தொடர முடியும்.
தற்போது, மத்தியில் ஆளும் கட்சியுடன், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ளது என்பதால், அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்காதது, சந்தேகத்தை எழுப்புகிறது. புகார் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை; இது, தன் சட்டப்பூர்வ கடமையை, அமலாக்கத் துறை நிறைவேற்றத் தவறி விட்டது என்பதை காட்டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
