– நமது நிருபர் –
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், லண்டனில் இருந்து, நேற்று இரவு சென்னை திரும்பினார்.
ஸ்டாலின் பேரனும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் பல்கலையில் பட்டம் பெற்றார்.
தாமதம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, இரண்டு வாரத்திற்கு முன் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, உதயநிதி மற்றும் குடும்பத்தினர், லண்டன் சென்றனர்.
லண்டன் பயணத்தை முடித்துவிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு ஸ்டாலின், சென்னை திரும்புவதாக இருந்தது.
ஆனால், லண்டனில் இருந்து துபாய் வந்த விமானம் தாமதமானதால், சென்னை வரும் விமானத்தை தவற விட்டார். எனவே, திட்டமிட்டபடி நேற்று காலை வர முடியவில்லை.
இதையடுத்து, ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் நேற்று இரவு 8:40 மணிக்கு சென்னை திரும்பினர். விமான நிலையத்தில், ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, ஸ்டாலின் குடும்பத்தினரை வரவேற்க, நேற்று காலை, கட்சியினர் பலத்த ஏற் பாடுகளை செய்திருந்தனர்.
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் நேரு, பொன்முடி, சக்கரபாணி, சுப்பிரமணியன், அன்பரசன் மற்றும் கட்சியினர், காலை 7:00 மணிக்கே விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
ஏமாற்றம் ஆனால், காலை 8:00 மணிக்கு, ஸ்டாலின் குடும்பத்தினர் வரவில்லை. இதனால், தி.மு.க.,வினர் ஏமாற்றம் அடைந்தனர். வரவேற்பு பதாகைகளை, அங்கேயே போட்டுவிட்டு புறப்பட்டு சென்றனர்.
தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், “லண்டனிலிருந்து துபாய் வந்த, ‘எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்’ விமானம் தாமதமானதால், துபாயில் இருந்து, சென்னைக்கு புறப்பட்ட விமானத்தை, அவர்களால் பிடிக்க முடியவில்லை.
”எனவே, காலை 8:00 மணிக்கு வர முடியவில்லை. இந்த தகவலை உடனடியாக தெரிவித்திருந்தால், கட்சியினர் காலையில் காத்திருந்து ஏமாற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது,” என்றனர்.
