ஜன நாயகன் ரிலீஸ், 3 மணி நேரம் அனுமதி கொடுங்க ப்ளீஸ்… பழைய விஜய் ரசிகனாக மாற முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்த அமைச்சர்

தளபதி விஜயின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜூலை 23-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை பார்க்க ஒருநாள் விடுப்பு எடுத்துள்ளேன், ஆனால், 3 மணி நேரம் மட்டும் மீண்டும் விஜய் ரசிகனாக மாற முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளேன் என்று அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த தளபதி விஜய், கடந்த 2024-ம் ஆண்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, 2026 சட்டசபை தேர்தலில் தனி பெரும கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்து முதல்வராக பதவியேற்றுள்ளார். ஆனால் அவர் நடிப்பில் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜன நாயகன், 7 மாத காத்திருப்புக்கு பிறகு வரும் ஜூலை 23-ந் தேதி வெளியாக உள்ளது த.வெ.க தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, 

எச்.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி வெளியாக இருந்தது.  அதே சமயம் சென்சார் பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே போன நிலையில், படக்குழுவினர் அனைத்துத் தடைகளையும் தாண்டி படத்தை வெளியிடப் போராடி வந்தனர். இதற்கிடையே, விஜய் முதல்வர் ஆகிவிட்டதால், படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தேர்தலுக்கு முன்பே படம் ஆன்லைனில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தற்போது அனைத்து தடைகளையும் கடந்துள்ள ஜன நாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஜூலை 23-ந் தேதி 30 நாடுகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளே படத்திற்கு சுமார் 6 கோடிக்கு மேல் முன்பதிவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வெளிநாடுகளிலும் முன்பதிவு பரபரப்பபாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் நாளை நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இதனிடையே, தளபதி விஜயின் ரசிகர்களாக இருந்த பலரும் தற்போது தமிழகத்தில் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களாக இருக்கும் நிலையில், ஜன நாயகன் படம் வெளியாகும் நாளில் 3 மணி நேரம் மட்டும் விஜயின் ரசிகராக இருக்க அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் விக்னேஷ் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜன நாயகன் படம் வெளியாகும்போது அமைச்சர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ரசிகர்களாகிய நாங்கள் அந்த 3 மணி நேரம் மட்டும், பழைய ரசிகராக செயல்பட அனுமதி கேட்டுள்ளோம். முதல்வர் இன்னும் அனுமதி வழங்கவில்லை. படத்தை பார்க்க நான் ஏற்கனவெ விடுப்பு எடுத்துவிட்டேன். இனி வாழ்க்கையில் எப்போது முதல்நாள் முதல் காட்சி, அதிகாலை 4 மணி காட்சி என்பது தெரியவில்லை. முதல்வர் அந்த 3 மணி நேரம் எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்த பேட்டி வாயிலாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Source link