எல்பிஜிக்கு பதிலாக எத்தனால் எரிபொருள்: சுய சார்பு திட்டத்தில் அடுத்த கட்டம் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

நமது சிறப்பு நிருபர்

எல்பிஜி சிலிண்டர்களுக்கு மாற்றாக எத்தனாலை ஒரு முக்கிய சமையல் எரிபொருளாக அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் முழுவீச்சில் இறங்கி உள்ளது.

பெட்ரோலிய எரிபொருட்களுக்கு மாற்றாக எத்தனால் எரிபொருளை பயன்படுத்த தற்போது இந்தியாவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. எத்தனால், பெட்ரோலிய எரிபொருளைக் காட்டிலும் குறைவான விலையில் கிடைப்பதுடன், சுற்றுச் சூழலுக்கும் உகந்தது.

ஏற்கனவே பெட்ரோலில் 20% எத்தனால் கலப்படம் செய்து விற்பனை செய்யும் பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அன்னியச் செலாவணி கொடுத்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வது குறைகிறது. உள்நாட்டு வேளாண் உற்பத்தியாளர்களுக்கும் பலன் கிடைக்கிறது.

இதன் அடுத்த கட்டமாக தான் எல்பிஜிக்கு மாற்றாக எத்தனால் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கென எத்தனால் எரிபொருளில் இயங்கக்கூடிய ஸ்டவ்களை தயாரிக்கும் பணியை பொதுத்துறை நிறுவனங்கள் தீவிரப் படுத்தி உள்ளன. இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் பட்சத்தில், வெளிநாடுகளில் இருந்து பெட்ரோலியம், சமையல் காஸ் இறக்குமதி செய்வது கணிசமாக குறையும்.

Source link