நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி; கரப்பான் பூச்சி கட்சியினர் கைது

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி சார்பில் கடந்த மதம் முதல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் கல்வியாளர் சோனம் வாங்சுக் கலந்துகொண்டார். அவர் கடந்த ஜூன் 28 முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். மேலும், இன்று (20-07-26) நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்க இருந்த நிலையில், அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த இருந்தனர்.   

ஆனால், கடந்த சனிக்கிழமை அன்று (18-07-26) காவல்துறையினர் சோனம் வாங் சுக்கை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அங்கிருந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதையடுத்து, கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். மேலும், ஜூலை 20 அன்று நிச்சயம் அமைதி பேரணி நடைபெறும் என்று உறுதிப்படுத்தினார். அதன்படி, இன்று காலையில் கரப்பான் பூச்சி கட்சியினர் சிலர் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த முயன்றனர். 

அப்போது, டெல்லி காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். மேலும் போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த போராட்டத்தில் யாரும் கலந்துகொள்ள இயலாதபடி முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக நாடாளுமன்றம். குடியரசுத் தலைவர் மளிகை, பிரதமர் அலுவலகம் என அனைத்து பகுதிகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளன.  

இதனிடையே, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரப்பான் பூச்சி கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதோடு, போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அமைதி பேரணி நிச்சயம் நடக்கும் என்று கரப்பான் பூச்சி கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.  

Source link