2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து முக்கிய தலைவர்கள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பலரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விலகல் கடிதம் கொடுக்க உ்ளளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில், புதிய கட்சியான தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தனி பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சியுடன் இணைந்து ஆட்சியை பிடித்துள்ளது. அதே சமயம், தொடர் தோல்விகளை கண்ட அ.தி.மு.க. கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கட்சிக்குள் இருந்த முக்கிய தலைவர்கள் போர் கொடி தூக்கினர். இதில் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் தனி அணி செயல்பட தொடங்கியது.
நம்பிக்கை வாக்கெடுப்பில், இவர்களின் அணி விஜய்யின் த.வெ.க ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணி எதிராக வாக்களித்தது. இதனிடையே, எஸ்.பி.வேலுமணி மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்த நிலையில், சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்தார். அதே சமயம் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.வில் இருக்கிறாரா? இல்லையா என்பது இதுவரை கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற விழுப்புரம் மாவட்டம் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சி.வி.சண்முகத்திற்கு அழைப்பு விடுக்காதால், அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இருந்து தங்கள் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 300 பேர் தங்களது அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், தங்களர் ராஜினாமா கடிதத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுக்க, அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் பணியில் இருக்கும் நிலையில், தற்போது 3 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
