ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் உள்ள தனியார் ஆண்கள் விடுதியின் தரை தளத்தில் உள்ள உணவு தயார் செய்யும் இடத்தில் ஊழியர்கள் சப்பாத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வித்தியாசமான சத்தம் வருவதைக் கேட்ட அந்த ஊழியர் பின்பக்கமாகத் திரும்பிப் பார்த்தார். அப்போது, பின்பக்கமாக முதலை வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, ஊழியர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.
இதனைக் கண்டு அங்கிருந்த மற்ற ஊழியர்களும் அலறியடித்து ஓடினர். இது குறித்த தகவல் அறிந்த பயிற்சி மாணவர்களும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறினர். இதையடுத்து மாணவர்களும், ஊழியர்களும் அந்த முதலையை அங்கிருந்து விரட்ட முயன்றனர். அதுவும் செல்வதற்கு வழி தெரியாமல் அந்த விடுதிக்குள்ளாகவே சுற்றி வந்தது.
இந்நிலையில், இது குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு முதலையை அங்கிருந்துபாதுகாப்பாக அகற்றினர். 4 முதல் 5 அடி நீளம் கொண்ட அந்த முதலையை எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாகப் பிடித்துச் சென்ற வனத்துறையினர், அதனைச் சம்பல் ஆற்றில் விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளி கிழமை (17-07-26) அன்று திடீரென்று விடுதிக்குள் வந்த முதலையால் அங்கிருந்த அனைவரும் பீதியில் உறைந்தனர். இருப்பினும், யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றப்பட்டது பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது .
