அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முக ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று கூண்டோடு ராஜினாமா செய்வதால் மேலும் அதிமுகவில் சலசலப்பு எழுந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வில் எழுந்த சிக்கலைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சி.வி.சண்முகத்தை அக்கட்சியில் இருந்து நீக்கிய காரணத்தால் அவரது ஆதரவாளர்கள் அதீத கோபத்தில் இருந்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் இன்று (20.07.2026) காலை 11.30 மணிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாமதிக்கு சென்று முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜூனன், மாநில பொறுப்பாளர்கள் சங்கர், விழுப்புரம் மண்டலச் செயலாளர் சத்யராஜ், முன்னாள் சேர்மேன் சுரேஷ்பாபு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் அதிமுக கட்சியில் இருந்து விலக உள்ளனர்.
இதே போன்று நகரம், ஊராட்சி, கிளை என கட்சி அடிப்படை உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூண்டோடு அதிமுக கட்சியில் இருந்து விலகப்போவதாகவும் அறிவித்துவிட்டு, அதே கையோடு அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று ராஜினாமா செய்யவுள்ளனர். அடுத்த சில தினங்களுக்குப் பிறகு த.வெ.க.வில் இணைவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
