72வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமா 10 விருதுகளை அள்ளியது. சிறந்த தமிழ் படம் ‘ராயன்’, சிறந்த தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் படம் கேப்டன் மில்லர், சிறப்பு பிரிவு – தனுஷ்(கேப்டன் மில்லர்), சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் பெரியசாமி(அமரன்), சிறந்த பின்னணி இசை – ஜிவி பிரகாஷ் குமார்(அமரன்), சிறந்த படத்தொகுப்பு – கலைவாணன்(அமரன்), சிறந்த சண்டைப் பயிற்சி – அனல் அரசு(மகாராஜா), சிறந்த துணை நடிகை – சச்சனா நமிதாஸ்(மகாராஜா), சிறப்புப் பிரிவு – சுரேண் ஜி(ஒலிக்கலவை – மெய்யழகன்) மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்பு – டி.எஸ். ஹரிஹர சுதன்(ப்ளூ – குறும்படம்) ஆகிய படங்கள் வென்றது.
விருது பெற்றவர்களுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் ரசிகர்கள், ராயன் படத்துக்கு தேசிய விருதா? தங்கலான் படத்திற்காக விக்ரமுக்கு ஏன் வழங்கவில்லை? போன்ற பல்வேறு கேள்விகளையும் சமூக வலைதளங்களில் வைத்து வருகின்றன. மேலும் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர்களின் படங்களுக்கு விருது புறக்கணிக்கப்படுவதாகவும் ஒரு கருத்து உலா வந்தது.
இந்த கருத்துகள் குறித்து இயக்குநர் மிஷ்கினிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஒரு நல்ல படத்தை எடுத்து முடித்த பிறகு விருது தேவையில்லை. விருது என்பது ஊக்குவிப்பதற்கு மட்டும் தான். தங்கலான், வாழை போன்ற படங்களுக்கு கிடைக்கவில்லை எனக் குறை சொல்லக்கூடாது. பா.ரஞ்சித்தும் மாரி செல்வராஜும் விருதுகளுக்காக படம் பண்ணுபவர்கள் கிடையாது. விருது கிடைக்கும் பட்சத்தில் வாழ்த்துவோம், இல்லையென்றால் என் சகோதரர் யாராவது வாங்குவார்கள். எல்லாமே ஒரே குடும்பம் தான். அதனால் விருது கிடைத்தால் தட்டிகொடுப்போம். வரவில்லையென்றால் அதற்காக வருந்தக்கூடாது.
எந்த காரணத்தை கொண்டும் என் படங்களை நான் விருதுக்கு அனுப்பியது கிடையாது. இனிமேலும் அனுப்பப்போவதில்லை. மக்கள் கொடுப்பது தான் உலகில் மிகப்பெரிய விருது. அதே போல் ஒரு நல்ல விருது என்பது ஒரு கலைஞன் சினிமாவை விட்டு விலகும் போது அவனுடைய பேரன் பேத்திகள், என் தாத்தா மிகப்பெரிய கலைமாமணி என்று சொல்லவேண்டும்.
மலையாளத்தில் இலக்கிய ரீதியாக நிறைய படங்கள் வருகிறது. அது இங்கே குறைவு. ஆனால் அதைச் சமாளித்துவிடுகிறார்கள். இங்கேயும் பாக்யராஜ் போன்ற நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நல்ல எழுத்துகள் வந்திருக்கிறது. இந்தியாவிலேயே நல்ல க்ராஃப்ட் உள்ள சினிமாவில் தமிழ் சினிமா தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. ஸ்க்ரீன் ரைட்டிங் என்பதை நாம் தான் உண்மையாகவே செய்கிறோம்” என்றார்.
