கிண்டி தபால் நிலையத்தின் முன், கோரோ ஹெல்த் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து சிஐடியு தென்சென்னை மாவட்ட தலைவர் தோழர் முருகானந்தம் தலைமையில் ஐடி ஊழியர்கள் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் தோழர் செந்தில் துவக்க உரை (தென்சென்னை மாவட்ட செயலாளர்) நிகழ்த்தினார். அவரை தொடர்ந்து யுஎன்ஐடிஇ ஐடி ஊழியர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள், தோழர் கௌதம், தோழர் நவநீத கிருஷ்ணன், தோழர் ஜெயின் ராய் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தனர். இறுதியாக யுஎன்ஐடிஇ மாநில துணை செயலாளர் தோழர் சந்திரசேகர் ஆசாத் நன்றி தெரிவித்து முடித்து வைத்தார்.
ஆர்பாட்டத்தில் முக்கிய கோரிக்கைகளாக, உடனடியாக கோரோ ஹெல்த் நிறுவனம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்பில், சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு எந்த விதமான தண்டனைகளும் அளிக்கப்படுவதில்லை. அதனால், மாநில தொழிலாளர் துறையும் இத்தகைய நிறுவனங்களை தடுத்து நிறுத்துவதற்கு எந்த விதமான முனைப்பும் காட்டாமல் இருக்கின்றனர்.
அத்தகைய, தொழிலாளர்கள் நலனுக்கு பயனற்ற, அதே சமயம் பெரும் நிறுவனங்களின் மனிதாபிமான அற்ற நடவடிக்கைகளை சட்டபூர்வமாக பாதுகாக்கும், இந்த சட்ட வடிவத்தை திரும்ப பெற வேண்டும். ஐடி ஊழியர்களின் நலன் காக்க ஐடி நிறுவனங்களை முறைப்படுத்தும் நடவடிக்கை மத்திய மாநில அரசாங்கங்கள் உடனடியாக செயல்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
