சினிமாவில் ஒரு பாடல் சிறப்பாக அமைவரும், சிறப்பில்லாமல் போவதும் இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் கையில் தான் இருக்கிறது. அந்த வகையில், இளையராஜா கங்கை அமரன் கூட்டணி பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், இவர்கள் கூட்டணியில் சரியாக அமையாத சில பாடல்கள் இருக்கிறது, அந்த வகையில் ஒரு பாடலை கங்கை அமரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், டப்பிங் கலைஞர் எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் கங்கை அமரன். இயக்குனர் பாக்யராஜின் ஆரம்பக்கால படங்களுக்கு இசையமைத்த இவர், தன் அண்ணன் இளையராஜாவின் இசையில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார். சமீபகாலமாக இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும், நேர்காணல்களில் திரைத்துறை ஜாம்பவான்களுடனான தனது நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இளையராஜா இசையில் தான் எழுதிய ஒரு பாடல் குறித்து யாரும் எதிர்பாராத சில சுவாரசியமான, அதே சமயம் வருத்தமான உண்மைகளைப் பகிர்ந்துள்ளார்.
கவுண்டர் பாயிண்ட் முறையில் உருவான பாடல்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பகல் நிலவு’ படத்தில் இடம்பெற்ற ‘பூமாலையே தோல் சேரவா…’ என்ற பாடல் இன்றும் பலரின் ஃபேவரிட் மெலடியாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த பாடல் எழுதும்போது சந்தித்த சவால்கள் குறித்து பேசியுள்ள கங்கை அமரன், இந்த பாடல் ரொம்பவே ஸ்பெஷலானது. அண்ணன் (இளையராஜா) இந்த டியூனை ‘கவுண்டர் பாயிண்ட்’ (Counterpoint) என்ற மேற்கத்திய இசை முறையில் அமைத்திருந்தார். ஆனால், இதை என்னால் சரியாகப் புரிந்துகொண்டு வரிகளை எழுத முடியவில்லை.
அந்த பாடலின் வரிகள் சாதாரண வடிவில் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட லிங்க் (Link) முறையில் அமைய வேண்டும் என்று சொன்னார். அதாவது, எந்த வார்த்தையில் ஒரு வரி முடிகிறதோ, அதே வார்த்தையில் தான் அடுத்த வரி தொடங்க வேண்டும். அனைத்து வரிகளும் ஒன்றோடொன்று சங்கிலித் தொடர் போல இணைய வேண்டும்.இதன் காரணமாக பாடலை எழுதுவது மிகவும் கடினமாக இருந்தது. பின்னர் அண்ணன் கொடுத்த சில ஐடியாக்களின் மூலமே அந்த வரிகளை என்னால் எழுத முடிந்துள்ளது. இருவரும் கஷ்டப்பட்டு இந்த பாடலை உருவாக்கினாலும், நினைத்த அளவுக்கு அதைத் முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கம் இன்னும் இருக்கிறது.
இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கலாமே என்று தோன்றும். இந்த பாடல் எப்போது ஒலித்தாலும், அண்ணன் சொன்னதை நம்மால் சரியாகச் செய்ய முடியவில்லையே என்ற உறுத்தல் என் மனதில் இருந்துகொண்டே இருக்கும். இசை தெரிந்தவர்களுக்கு மட்டுமே இதன் பின்னணியில் உள்ள உண்மை புரியும். இனிவரும் காலங்களில் மற்ற இசையமைப்பாளர்கள் இந்த நுட்பத்தைப் புரிந்துகொண்டு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்,” என்று ஓப்பனாகப் பேசியுள்ளார் கங்கை அமரன்.
