கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர், கல்வித் துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், இதற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும், கடந்த ஜூன் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட கல்வியாளர் சோனம் வாங்சுக் ஜூன் 28 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வருகிறார். இதனிடையே, இன்று (20-07-26) நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருந்த நிலையில், கரப்பான் பூச்சி கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த இருந்தனர்.
அதன்படி, இன்று காலையில் கரப்பான் பூச்சி கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். ஆனால், காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அதனால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கரப்பான் பூச்சி கட்சியினருக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் வீரியமடைந்துள்ள நிலையில், ஒன்றிய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இருப்பினும், பிரதமர் அல்லது கேபினட் அமைச்சருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தக் கரப்பான் பூச்சி கட்சியினர் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
