ஆறு ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி மாஜி கவுன்சிலர் ஜாமின் மனு

புதுடில்லி: டில்லி கலவர வழக்கில், 2020ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் தாஹிர் ஹூசைன், மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மாத இடைக்கால ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

வடகிழக்கு டில்லியில், 2020ம் ஆண்டு நடந்த மத ரீதியான கலவரத்தில், 53 பேர் உயிரிழந்தனர்; 700 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தாஹிர் ஹூசைன் உட்பட 20 பேரை 2020ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி கைது செய்தனர்.

சிறையில் ஆறு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாஹிர், நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு:

எனக்கு குடல் இறக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அறுவைச் சிகிச்சை மற்றும் அதைத் தொடர்ந்த சிகிச்சைகள் பெற, மார்ச் 20ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை ஜாமின் வழங்க வேண்டும். ஜாமினுக்காக நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் கடைப்பிடிப்பேன். இடைக்கால ஜாமின் காலம் முடிந்ததும் நீதிமன்றத்தில் சரணடைந்து விடுவேன். சாட்சிகளைப் பாதிக்கவோ அல்லது ஆதாரங்களைத் திரிக்கவோ மாட்டேன்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, கூடுதல் அமர்வு நீதிபதி சமீர் பாஜ்பாய் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பு வாதத்தை கேட்பதற்காக விசாரணையை இன்று ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Source link