எலும்புகள் எல்லோருக்கும் உண்டு… மார்க்கண்டேயன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கணும்: அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கிருஷ்ணன்கோவில் திடலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கருணாநிதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிப்பட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெயக்கண்ணன், சுப்பிரமணியன், கருப்பசாமி, சின்னப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எலும்புகள் இருக்காது – முதல்வருக்கு பகிரங்க மிரட்டல் 

இந்தக் கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசும்போது, “மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர் உன்னை (விஜய்) சட்டமன்றத்துக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறோம். எங்களை என்ன கோமாளி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய். சட்டமன்றத்தை பூட்டுவோம் என நீ கூறுகிறாய், சட்டமன்றத்தை பூட்டினால் உன் எலும்புகள் இருக்காது; எலும்பை உடைத்துதான் அனுப்பி விடுவோம்” என்று முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

 விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது 

இந்நிலையில், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் தி.மு.க எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். 

மேலும் போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விளத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது கைதுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தல் 

இந்த நிலையில், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு. அவர் மீது தமிழக சட்டமன்ற சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்  திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார். ஏற்கனவே மேனாள் அமைச்சரும் திருச்செந்தூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல  பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.

மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான்  நினைவுபடுத்த விரும்புகிறோம்.” என்று அமைச்சர் வன்னி அரசு பதிவிட்டுள்ளார். 

Source link