விஜயகாந்த், மீனா நடிப்பில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான பெரியண்ணா திரைப்படத்தின் பாடல் பதிவு தொடர்பாக நடந்த மறக்க முடியாத அனுபவத்தை இசையமைப்பாளர் பரணி பகிர்ந்துள்ளார். குறிப்பாக, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடன் நடந்த சம்பவத்தை அவர் சுவாரஸ்யமாக நினைவுகூர்ந்தார்.
பரணி கூறுகையில், “பெரியண்ணா படத்தில் இடம்பெற்ற ‘தந்தானே தாமரைப்பூ’ பாடலை முதன்முதலில் பதிவு செய்ய எஸ்.பி.பி. சார் வந்திருந்தார். நான் அப்போது புதிதாக அறிமுகமாகியிருந்த இசையமைப்பாளர் என்பதால், அவர் தனது அனுபவத்திற்கு ஏற்ற பாணியில் பாடலைப் பாடிக் கொடுத்தார். பதிவு முடிந்த பிறகு, ‘ஓகே… ஸ்டைல் நன்றாக இருக்கிறது’ என்று என்னை பாராட்டியும் சென்றார். ஆனால், அந்தப் பாடலை ஒரு கிராமத்து மணம் வீசும் பாணியில் நான் இசையமைத்திருந்தேன். ஆனால் பாடல் பதிவு செய்யப்பட்ட விதம் எனது கற்பனைக்கு முழுமையாக பொருந்தவில்லை.
இது குறித்து இயக்குநர் இது குறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரிடம் கூறியபோது, “நீ எப்படி கம்போஸ் செய்தாயோ அப்படியே மீண்டும் பதிவு செய். எஸ்.பி.பி.யை மறுபடியும் அழைத்து பாட வை” என்று சொன்னார். இதைக் கேட்டதும் எனக்கு மிகுந்த பதற்றம் அதிகமானது. அவ்வளவு பெரிய பாடகரை மீண்டும் அழைக்க வேண்டிய நிலை என்றால் என்ன நினைப்பார்கள் என்ற பயம். நான் அப்போது புதிதாக அறிமுகமான இசையமைப்பாளர். ஆனாலும் அவர் சொன்னபடி எஸ்.பி.பி சாரை மீண்டும் அழைத்தேன். மூன்று நாட்கள் கழித்து அவரை மீண்டும் தொடர்புகொண்டு பதிவு செய்ய அழைத்தேன். அவர் எந்த தயக்கமும் இல்லாமல் ஏ.வி.எம். ஆர்.ஆர். தியேட்டருக்கு வந்தார்.
வந்த உடனே, பதிவு தொடங்குவதற்கு முன்பு, “நான் பாடியதில் என்ன தவறு? உங்களுக்கு எப்படி வேண்டும் என்று பாடிக் காட்டுங்கள்” என்று எஸ்.பி.பி. நேரடியாக கேட்டார். அதன்பிறகு, நான் நினைத்திருந்த பாணியில் பாடலைப் அவரிடம் பாடிக் காட்டினேன். அதை கவனமாகக் கேட்ட எஸ்.பி.பி. அதே உணர்வுடன் மீண்டும் பாடலை பதிவு செய்து கொடுது்தார். அன்று நான் பாடிக் காட்டாமல் இருந்திருந்தால், நான் எதிர்பார்த்த உணர்வு பாடலில் வந்திருக்காது. ஆனால், எஸ்.பி.பி. சார் எந்தவித ஈகோவும் இல்லாமல், ஒரு புதிய இசையமைப்பாளரின் விருப்பத்தை மதித்து மீண்டும் பாடிய அந்த பணிவு இன்று வரை என்னால் மறக்க முடியாத ஒன்று” என்று இசையமைப்பாளர் பரணி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
