OMR-ல் மர்ம துர்நாற்றம்: இரவு முழுவதும் தவிக்கும் மக்கள் – ஆலத்தூர் தொழிற்பேட்டை மீது சந்தேகம்? – omr foul smell alathur sidco under suspicion

கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் OMR சாலையோர பகுதிகளில் துர்நாற்றம் தொடர்ந்து வீசுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பல குடியிருப்பு சங்கங்கள் இணைந்து இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ள நிலையில், துர்நாற்றத்தின் மூலத்தைக் கண்டறிய தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சென்னையின் ஓ.எம்.ஆர் சாலை பகுதியில், திருப்போரூர் முதல் செம்மஞ்சேரி வரை செல்லும் வழியில் இரவு நேரங்களில் தொடர்ந்து வீசும் கடுமையான துர்நாற்றம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாற்றம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் (TNPCB) குடியிருப்போர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

TNPCB விசாரணை கோரி குடியிருப்போர் வலியுறுத்தல்

சென்னையின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய மையமாக விளங்கும் OMR சாலை வழித்தடத்தில் வசிக்கும் மக்கள், கடந்த சில நாட்களாகஇரவுநேரங்களில் வீசும் கடுமையான துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்போரூர் முதல் செம்மஞ்சேரி வரை பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் இந்தப் பிரச்சினை பதிவாகியுள்ளதாக OMR குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு (FOMRRA) தெரிவித்துள்ளது.

இரவு 9 மணிக்குப் பிறகு அதிகரிக்கும் துர்நாற்றம்

அப்பகுதி மக்களின் தகவலின்படி, இரவு 9 மணி முதல் அதிகாலை வரை கந்தக நெடி போன்ற கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இது தனிப்பட்ட குடியிருப்புகளின் பிரச்சினையாக கருதப்பட்ட நிலையில், பின்னர் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களும் இதே அனுபவத்தை பகிர்ந்ததால், இது பரவலான சுற்றுச்சூழல் பிரச்சினையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

30-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வளாகங்களில் புகார்

இது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் பேசுகையில், “சுமார் 10 நாட்களுக்கு முன்பு சிலர் செத்த எலி அழுகியது போன்ற கடுமையான துர்நாற்றத்தை உணர்ந்தனர். முதலில்அது எங்கள் குடியிருப்பின் உள் பிரச்சினையாக இருக்கலாம் என்று கருதி, காற்றோட்ட அமைப்புகள் உள்ளிட்டவற்றை பரிசோதித்தோம். ஆனால் பின்னர் OMR பகுதியில் உள்ள சுமார் 30 பாதுகாக்கப்பட்ட குடியிருப்பு வளாகங்களைச் சேர்ந்த மக்களும் அதே துர்நாற்றத்தை, குறிப்பாக இரவு நேரங்களில் உணர்ந்ததாக தெரிவித்தனர்,”என்றனர்.

ஆலத்தூர் தொழிற்பேட்டை மீது சந்தேகம்?

காற்றின் திசையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தபோது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தெற்கே சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலத்தூர் சிட்கோ மருந்துத் தொழிற்சாலை வளாகத்திலிருந்து இந்த துர்நாற்றம் வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை குடியிருப்போர் முன்வைத்துள்ளனர். இருப்பினும், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இதுவரை வெளியாகவில்லை.
இதனால், துர்நாற்றம் அதிகமாக பதிவாகும் இரவு நேரங்களில் தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வுகள் நடத்தி, தொடர்ச்சியான காற்று மற்றும் உமிழ்வு கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் FOMRRA கோரிக்கை விடுத்துள்ளது. சுற்றுச்சூழல் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த எம்எல்ஏ

இந்த விவகாரம் குறித்து கருத்து கேட்க முயன்றபோதும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையில், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பி. விஜயராஜ், பொதுமக்களின் புகாரை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். மேலும், சந்தேகம் எழுந்துள்ள தொழிற்சாலைகளையும் நேரில் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

திருப்போரூர் தொகுதியில் எந்த கட்சிக்கு செல்வாக்கு அதிகம்?

தொடர்ந்து இரவு நேரங்களில் வீசும் இந்த மர்ம துர்நாற்றத்தின் உண்மையான காரணத்தை அதிகாரிகள் விரைந்து கண்டறிந்து, பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Source link