தமிழகத் தொல்லியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள அருள்மிகு முத்தாம்பிகை உடனாகிய வால்மீகநாதர் கோயில் மகாமண்டப தூணில், 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய புத்தர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் எழுத்தாளர் அருள்முத்துக்குமரன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் இந்தச் சிற்பம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் கண்டறியப்பட்ட புத்தர் சிற்பங்களிலேயே, இருபுறமும் சங்கு மற்றும் சக்கரத்துடன் காணப்படும் முதல் புடைப்புச் சிற்பம் இதுவே என ஆய்வாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். இந்தச் சோழர்கால சிவன் கோயில் ஒரு காலத்தில் புத்த விகாராக இருந்திருக்கலாம் அல்லது வேறு பகுதியிலிருந்து இந்தத் தூண் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்ற வரலாற்று விவாதத்தை இக்கண்டுபிடிப்பு ஏற்படுத்தியுள்ளது.
உலக தமிழராய்ச்சி கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் நலங்கிள்ளி, தெம்மாவூர் நந்தன் மற்றும் எழுத்தாளர் அருள்முத்துக்குமரன் ஆகியோர் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாம்பிகை உடனாகிய வால்மீகநாதர் கோவில் கள ஆய்வில் புத்தர் சிற்பதை கண்டுபிடித்தனர்.
முன்னாள் இந்திய தொல்லியல் துறை இயக்குநர், தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆலோசகர் முனைவர் தயாளன் அவர்கள் இச்சிலை பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்றும் 13 அல்லது 14 நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையாக இருக்கலாம் என்கிறார். மேலும் இச்சிற்பம் தூணில் இடம்பெற்றுள்ளதால், ஒன்று இக்கோவில் ஒரு காலத்தில் புத்த விகாராக இருந்திருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் புத்த விகாரிலிருந்து எடுத்து வந்து கேட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.
ஆய்வாளர் மகாத்மா செல்லப்பாண்டியன் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள வன்மீகநாதர் கோவிலின் மகாமண்டப தூணில் புத்தரின் சிற்பம் காணப்படுகிறது. புத்தர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் (தசாவதாரம்) ஒருவர் என்பதை குறிக்கும் வகையில் சிற்பத்தின் இருபுறமும் சங்கும் சக்கரமும் அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்.
சங்கும் சக்கரமும் பௌத்தம்
இக்கோவிலில் வீர ராஜேந்திரனின் கி.பி. 1068-ஆம் ஆண்டு ஆட்சிக்கால கல்வெட்டு, இக்கோயிலுக்கு ஒரு நிலத்தை தானமாக வழங்கினார் என்றும் முதலாம் குலோத்துங்க சோழனின் கி.பி. 1117-ஆம் ஆண்டு ஆட்சிக்கால கல்வெட்டு, அணையாத் தீபம் ஏற்றும் அறக்கொடையைப் கல்வெட்டு செய்து நமக்கு சொல்கிறது. அதனால் வரலாறு மற்றும் கல்வெட்டுகள் இக்கோயில் 11 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான சோழர் காலத்தைச் சேர்ந்தது என்று நாம் கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம். மேலும் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டப தூண் போன்றவை வெவ்வேறு காலத்தை சேர்ந்ததா இருக்கவே வாய்ப்பு அதிகம் உள்ளது.
கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் புத்தரின் சிற்பம் பற்றி குறிப்பிடும்போது தமிழகத்தில் காணப்படும் சிற்பங்களில் இருபுறம் சங்கும் சக்கரமும் காணப்படும் முதல் புடைப்பு சிற்பம் இதுவாகத்தான் இருக்கு என்றும் சங்கும், சக்கரமும் விஷ்ணுவின் அடையாளம் மட்டுமல்ல புத்தரின் அடையாளமும் என்கின்றனர்.
பௌத்தத்தில் சங்கும் சக்கரமும் மிக முக்கியமான புனித சின்னங்கள் ஆகும். இவை மதம், தத்துவம், மற்றும் தியானம் சார்ந்த விஷயங்களை விளக்கப் பயன்படுகின்றன. சங்கு (Conch Shell) புத்தரின் போதனைகள் அமைதியானவை. சங்கின் ஒலி, அமைதியைத் தருவதாகவும், தீய சக்திகளை அகற்றுவதாகவும் நம்பப்படுகிறது. மேலும் புத்தரின் போதனைகள் உலகம் முழுவதும் பரவுவதை சங்கு குறிக்கிறது.
சக்கரம் (Dharmachakra): இது ‘தம்ம சக்கரம்’ அல்லது தர்ம சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. புத்தர் தனது முதல் போதனையை வழங்கியதை இது குறிக்கிறது. இந்தச் சக்கரத்தில் எட்டு ஆரங்கள் (Spokes) உள்ளன. இது புத்தர் கூறிய எட்டுக் கிளை வழிகளை குறிக்கிறது. இந்தச் சக்கரம் தொடர்ந்து சுழல்வது, புத்தரின் போதனைகள் எக்காலத்திற்கும் உரியவை என்பதை உணர்த்துகிறது. என்றும் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆய்வில் தொல்லியல் துறை ஆர்வலர்கள் நீலம் பண்பாட்டு மையம் வெங்கடேஷ், தமிழ்முரசு, பிரதீபன், பவித்ரா,பிரகாஷ் மற்றும் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
