கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் வசிக்கும், 70 வயதான ஓய்வுபெற்ற தாசில்தார், ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ எனும் பெயரில் நடந்த மோசடியில் சிக்கி, 40 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.
இதனால், பொதுமக்கள் மத்தியில், டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய முடியாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற ஒன்று, நம் சட்டத்தில் இல்லை. போலீஸ் அல்லது மத்திய அமைப்புகள் எவரையும் தொலைபேசி வாயிலாக கைது செய்வதும், பணம் கேட்டு வழக்கை முடிக்கும் நடைமுறையும் இல்லை.
இதுகுறித்து, மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி கூறியதாவது:
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், ஓய்வுபெற்ற தாசில்தார் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில், 40 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
போனில் தன்னை மிரட்டிய நபரின் மிரட்டலுக்கு பயந்து, வங்கிக்கு சென்று, அந்த கும்பல் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார். இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் சிக்காமல், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். டிஜிட்டல் அரெஸ்ட் என்ற ஒன்றே கிடையாது. இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
சந்தேகமான அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டும். வங்கி, ஆதார், ஏ.டி.எம்., போன்ற விபரங்கள், ஓ.டி.பி., போன்றவற்றை யாரிடமும் பகிரக்கூடாது.
இந்த தகவலை, அவரவர் வீடுகளில் உள்ளவர்களுக்கு, இளைஞர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
