மான்செஸ்டர்: இங்கிலாந்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து ‘ரவுண்டு-16’ சுற்றுக்கான 2வது போட்டியில் ரியல் மாட்ரிட் அணி (ஸ்பெயின்) 2-1 என, மான்செஸ்டர் சிட்டி அணியை (இங்கிலாந்து) வீழ்த்தியது. ஏற்கனவே முதல் போட்டியில் 3-0 என அசத்திய ரியல் மாட்ரிட் அணி, ஒட்டுமொத்தமாக 5-1 (3-0, 2-1) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. மற்றொரு ‘ரவுண்டு-16’ போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி (பிரான்ஸ்) 8-2 என (5-2, 3-0), செல்சி அணியை (இங்கிலாந்து) தோற்கடித்தது.
சோபியா கெனின் ஏமாற்றம்
மயாமி: அமெரிக்காவில், டபிள்யு.டி.ஏ., மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின் 6-3, 1-6, 3-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அனா பிலின்கோவாவிடம் தோல்வியடைந்தார். மற்றொரு முதல் சுற்று போட்டியில் செக்குடியரசின் கேத்ரினா சினியாகோவா 1-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் கொலம்பியாவின் கமிலா ஒசோரியோவிடம் தோல்வியடைந்தார்.
நியூயார்க் அணி அபாரம்
நியூயார்க்: அமெரிக்காவில் நடக்கும் என்.பி.ஏ., கூடைப்பந்து தொடருக்கான லீக் போட்டியில் நியூயார்க் நிக்ஸ், இந்தியானா பேசர்ஸ் அணிகள் மோதினர். இதில் நியூயார்க் அணி 136-110 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் மயாமி ஹீட் அணி 106-136 என்ற கணக்கில் சார்லோட்டி ஹார்னட்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
எக்ஸ்டிராஸ்
* கிரீசில் நடந்த சர்வதேச உஷு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் துர்கேஷ்வர் சிங் (90 கிலோ) வெள்ளி வென்றார். இவர், எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) காவலராக உள்ளார்.
* மும்பையில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார் 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சகவீரர் சிராக் துஹானை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் கரன் சிங் 6-4, 6-2 என, சகவீரர் விஷால் பால்சேகரை தோற்கடித்தார்.
* இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ‘ஒன் டே’ டிராபி எலைட் தொடர் நடத்தப்படுகிறது. நேற்று ராஞ்சியில் நடந்த காலிறுதியில் மகாராஷ்டிரா (260/10) அணி, 24 ரன்னில் பஞ்சாப்பை (236/10) வென்றது. மற்றொரு காலிறுதியில் கர்நாடகா (221/10), 41 ரன்னில் உத்தரகாண்ட்டை (180/10) சாய்த்தது.
* டில்லியில் இன்று நடக்கவுள்ள இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் டில்லி, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.
* சீனாவில், ஆசிய பீச் விளையாட்டு (ஏப். 22 – 30) நடக்கவுள்ளது. கபடி போட்டியில் இந்திய ஆண்கள் அணி ‘பி’ பிரிவில் சீனதைபே, தாய்லாந்து, இலங்கையுடன் இடம் பெற்றுள்ளது. இந்திய பெண்கள் அணி, ‘ஏ’ பிரிவில் இலங்கை, சிரியாவுடன் உள்ளது.
