தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா? தி.மு.க எம்.எல்.ஏ கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கிருஷ்ணன்கோவில் திடலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கருணாநிதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிப்பட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெயக்கண்ணன், சுப்பிரமணியன், கருப்பசாமி, சின்னப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 முதல்வருக்கு பகிரங்க மிரட்டல் 

இந்தக் கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசும்போது, “மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர் உன்னை (விஜய்) சட்டமன்றத்துக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறோம். எங்களை என்ன கோமாளி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய். சட்டமன்றத்தை பூட்டுவோம் என நீ கூறுகிறாய், சட்டமன்றத்தை பூட்டினால் உன் எலும்புகள் இருக்காது; எலும்பை உடைத்துதான் அனுப்பி விடுவோம்” என்று முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கைது 

இந்நிலையில், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.

மேலும் போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விளத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஸ்டாலின் கண்டனம் 
 
இந்த நிலையில், விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு. “அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?” என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?

கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?

மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences” என்று பதிவிட்டுள்ளார். 

Source link