ஸ்ரீநகர்: மோசமான வானிலை காரணமாக அமர்நாத் குகை கோயில், வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலில் ஆண்டுதோறும் இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனி லிங்கத்தை வழிபட ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட 3.76 லட்சம் பேர் பனி லிங்கத்தை கண்டு வழிபட்டுள்ளனர்.
இந் நிலையில் மோசமான வானிலை காரணமாக, அமர்நாத், வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரைகள் 2வது நாளாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஜம்மு, உதம்பூர், ரம்பான் ஆகிய பகுதிகளில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
அடுத்த சில நாட்களில் வானிலை மோசமாக இருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், கதுவா, சம்பா, உள்ளிட்ட பல பகுதிகளில் முகாம்கள், தங்கும் விடுதிகளில் ஏராளமான பக்தர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
வானிலை சீராகும் வரை, கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு பக்தர்கள் செல்வதை தடுக்குமாறு மாவட்ட நிர்வாகம், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.
