“ஜனநாயகம் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது” – கீதா ஜீவன் பரபரப்பு பேட்டி!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை ஒருமையில் விமர்சித்துப் பேசியதோடு, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து முதலமைச்சர் விஜய்யை விமர்சித்ததற்காக திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரால் இன்று (20.07.2026) கைது செய்யப்பட்டார். இந்நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, திமுகவினர் மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர்கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மார்க்கண்டேயன் எந்த நிலையில் இருக்கிறார் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. காலையில் கைது செய்து அழைத்து வந்ததில் இருந்து, அவர் கையில் செல்போன் கூட கொடுக்கவில்லை. அவருடைய உதவியாளரைக்கூட பார்க்க அனுமதிக்கவில்லை. வழக்கறிஞரையும் சந்திக்க விடவில்லை. அவருடன் இருந்த ஒருவர் மட்டும் அவரைப் பார்த்ததாகக் கூறுகிறார். மற்ற யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அவருக்கு ஏதாவது ஆகிவிடக் கூடாது. ஏற்கனவே அவர் உடல்நலக் குறைவு உள்ளவர். அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன. 

அப்படிப்பட்ட ஒருவரை இப்படி அடைத்து வைத்துவிட்டு, எங்களைக் கூட பார்க்க விட மறுக்கிறார்கள். இது காவல்துறையின் அராஜகம். எங்கோ மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இங்கு இருக்கும் அதிகாரிகளால் யாராலும் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஒரு எம்.எல்.ஏ.வை கைது செய்யும்போது எந்த நோட்டீசும் வழங்கவில்லை. எஸ்.பி.யைச் சந்திக்க வேண்டும் என்றாலும் அனுமதிக்கவில்லை. ஜனநாயகம் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஆளுங்கட்சியினர் எந்த அளவுக்கு செயல்படுகிறார்கள் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு வந்தால் ரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?. ஆளுங்கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். ஆனால், திமுக என்றாலே உடனடியாக கைது, அடக்குமுறை என செயல்படுகிறார்கள். இன்று எங்களையும் கைது செய்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த காவல்துறை அராஜகம் ஒழிய வேண்டும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்கண்டேயன் பேசினார். இதேபோல், இன்று அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனாவும் கடந்த காலத்தில் எங்கள் முதலமைச்சரை ‘முட்டாள் முதலமைச்சர்’ என்று பேசியிருந்தார். 

அப்போது அவரை கைது செய்தார்களா?. 42 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தபோது, அப்போது இருந்த ஆட்சியினர் என்ன செய்தார்கள்? அப்போது யாரையும் கைது செய்தார்களா?. ஆனால், இன்று ஒரு சாதாரண பேச்சுக்காக எந்த நோட்டீசும் வழங்காமல், விசாரணைக்குக் கூட அழைக்காமல், எந்த முன்அறிவிப்பும் இன்றி காலை 6 மணிக்கே சென்று கைது செய்திருக்கிறார்கள். இது சட்டத்தைப் பின்பற்றும் ஆட்சியா? இது நாடா, காடா?. இந்த நிலை நீண்ட நாள் நீடிக்காது. அதிகபட்சம் இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே இந்த ஆட்சி இருக்கும். அதுவரைதான் காவல்துறையினர் இப்படி செயல்பட முடியும். 

anitha-radha-krishnan-arr-pm
கோப்புப்படம்

என்னை காவல்துறையினர் இடுப்பைப் பிடித்து இழுத்தனர். அந்த காவல்துறை அதிகாரி தான் என்னிடம், ‘எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யுங்கள் உங்களை த.வெ.க.வில் சேர்த்து எல்லாம் செய்கிறேன்’எனக் கூறினார். டி.எஸ்.பி.யே வந்து என்னை இடுப்பைப் பிடித்து இழுத்தார். இதுகுறித்து ஆளுநர் விசாரணை நடத்தும்போது, நான் பகிரங்கமாக அனைத்தையும் தெரிவிப்பேன்” எனத் தெரிவித்தார்.

Source link