இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருப்பதை, பிசிசிஐ சுலபமாக எடுத்துக் கொள்ளவில்லை.
காரணம், ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடர் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்க காலநிலையும், இங்கிலாந்து காலநிலையும் ஒரே மாதிரி இருப்பதால், இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இந்திய அணி செயல்பாடு பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
படுசொதப்பல்: இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில், இந்திய அணி படுமோசமாக சொதப்பி, இங்கிலாந்தை 387 ரன்கள் வரை அடிக்கவிட்டது, கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் செயல்பாடு, பெரிய அளவில் விமர்சனத்தை பெற்றுள்ளது.
என்ன காரணம்? விக்கெட் கீப்பராக இஷான் கிஷனின் செயல்பாடு சிறப்பாக இல்லை. குறிப்பாக, கே.எல்.ராகுல் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அவரை ஓரங்கட்டி, திடீரென்று இஷான் கிஷனுக்கு முழுநேர விக்கெட் கீப்பிங் இடத்தை கொடுத்துள்ளனர். ஆனால், இஷான் கிஷனால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் மட்டும் 3 முக்கிய கேட்ச்களை கோட்டைவிட்டார். ஜாகப் பெத்தல் 18 ரன்கள் எடுத்திருந்தபோதும், பென் டக்கெட் 26 ரன்னையும், 68 ரன்னையும் எடுத்திருந்தபோது, இஷான் கிஷன் கேட்ச்சை விட்டார். மேலும், ஒயிட் பால்களை சரியாக பிடிக்காமல் விட்டு, எக்ஸ்டா 8 ரன்களை கசியவிட்டார். ரிவியூவும் சரியாக எடுக்க முடியவில்லை.
அணியில், கே.எல்.ராகுல் இருந்தும், இஷான் கிஷனுக்கு ஏன் இப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? டி20 பார்மெட்டிலும் கூட சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக இருந்த நிலையில், அவரை ஓரங்கட்டி இஷான் கிஷனை முழுநேர விக்கெட் கீப்பராக ஆக்கியுள்ளனர். குறிப்பாக, டி20 பார்மெட்டில், சராசரியாக 30 பந்துகளில்தான் அரை சதம் அடிக்கிறார். மேலும், ஒருநாள் பார்மெட்டில் பெரிய ரன்களை அடிக்க முடியவில்லை.
இப்படி, அனைத்திலும் சொதப்பும் இஷான் கிஷனுக்கு, முழுநேர விக்கெட் கீப்பர் பதவியை, தேடி தேடி கொடுக்க ஒரே காரணம், இஷான் கிஷன், கேப்டன் ஷுப்மன் கில்லின் நண்பராக இருப்பதால்தான். மேலும், ரன் மிஷின் குர்நூர் பிராரும், குஜராத் டைடன்ஸை சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமே இடம் கொடுக்கப்படுகிறது.
மோக்ஷின் கான், முகமது ஷமி போன்ற திறமையானவர்கள் இருந்தும், குர்நூர் பிராருக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். இதுவும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சமீப காலமாகவே இந்திய அணியில், திறமையான சீனியர் வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, எதிர்கால இந்திய அணியை கட்டமைக்கிறோம் என்ற பெயரில் இந்திய அணியை, பலவீனப்படுத்தி வருகிறார்கள். இதற்குமுன், டெஸ்ட், டி20 பார்மெட்டில் இப்படி செய்து, அணிகளை பலவீனப்படுத்திய நிலையில், தற்போது ஒருநாள் பார்மெட்டிலும் இந்த நிலையை தொடர்கிறது.
திறமையான சீனியர்களை ஒரேயடியாக ஓரங்கட்ட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான், புரியாத கேள்வியாக இருக்கிறது. சீனியர்கள் இருந்தால், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் சொல்பேச்சை கேட்க மாட்டார்கள் என்பதால்தான், சீனியர்களை கம்பீர் புறக்கணிக்கிறார் என்ற கருத்தும் இருக்கிறது. இப்படி, தன்னுடைய சுலநலத்திற்காக, அணியை கம்பீர் பலவீனப்படுத்துவதை, பிசிசிஐயும் வேடிக்கை பார்ப்பதுதான் துயரத்திலும் பெரிய துயரமாக இருக்கிறது.
