சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் கள்ளநோட்டு விற்பனை கும்பல் பதுங்கியிருப்பதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு நடத்திய சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் விசாரணையில், தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் இந்த நோட்டுகளை விற்பனைக்குக் கொடுத்தது தெரியவந்தது.
போலீசார் அவரைத் தஞ்சாவூரில் கைது செய்தபோது பல திடுக்கிடும் பின்னணிகள் வெளிவந்தன. ரவிச்சந்திரன் 2015 முதல் மலேசியாவில் வசித்து வந்துள்ளார். மலேசியாவில் 25 ஆண்டுகளாக வசிக்கும் அவரது சகோதரர் ரமேஷ் உதவியுடன், அங்குள்ள ஒரு கள்ளநோட்டு கும்பலுடன் ரவிச்சந்திரனுக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் கள்ளநோட்டுகள் இந்தியாவுக்குக் கடத்தி வரப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு மாதமாக முகாமிட்டிருந்த பரிமலா என்ற பெண் மூலம் இந்த நோட்டுகள் கடத்தப்பட்டு, புவனேஸ்வரி என்ற பெண் வழியாகக் கைமாற்றப்பட்டுள்ளன.
தற்போது புவனேஸ்வரியும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை ரவிச்சந்திரன், சபிபுல்லா, புவனேஸ்வரி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மலேசியாவுக்குத் தப்பி ஓடிய பரிமலாவை போலீசார் தேடி வருகின்றனர். இக்கும்பல் இதுவரை சுமார் 1 கோடி ரூபாய் வரை கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் மலேசியா வரை சர்வதேச கும்பலுடன் தொடர்பு இருப்பதால், இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றச் சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர். வழக்கு ஆவணங்களைப் பெற்று தேசிக புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் விரைவில் விசாரணையைத் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
