மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுகவுடனான கூட்டணியை முறித்ததை தொடர்ந்து, ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியில் இணைந்தார். தவெக அரசுக்கு உறுதுணையாக இருப்பேன். இந்த அரசினை கவிழ விட மாட்டேன் என உறுதியாக வைகோ சூளுரைத்து வருகிறார். இந்நிலையில் விழுப்புரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், மதிமுக வைகோ குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் மதிமுக கூட்டணி வைத்திருந்த நிலையில், தவெக விஜய் குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்தார் வைகோ. இதனையடுத்து தேர்தில் திமுக வெற்றி வாய்ப்பினை தவறவிட்ட நிலையில், தவெக ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்தார் வைகோ. திமுகவை கடுமையாக விமர்சித்த அவர், ஆளுங்கட்சியான தவெகவை பாராட்டி பேசினார். அதோடு முதல்வராக பொறுப்பேற்றதற்கு பின்பாக விஜய், வைகோவை சந்தித்து பேசியதும் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் சமீபத்தில் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக முடிவு எடுத்தது. தொடர்ந்து தவெகவுடன் கூட்டணியில் இணைவதாகவும் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய்யை பாராட்டி வைகோ அவருடைய மகன் துரை எம்பியும் பேசி வருகின்றனர்.
இப்படியான நிலையில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், மதிமுக வைகோ குறித்து விழுப்புரம் கூட்டத்தில் பேசியுள்ளது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக அவர் பேசுகையில், ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் திறவு. 1994 ஆம் ஆண்டு ஒரு அரசியல் மாற்றத்திற்கு அகரம் இடுகிறார் அண்ணன் வைகோ. ஆனால் அவரால் முடியவில்லை. இன்றைக்கு அவரே எங்கள் தலைவர் விஜய்யின் காலடியில் வந்து விழுந்து கிடக்கிறார் என்று வைகோ குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதே போல் தமாக உள்ளிட்ட கட்சிகள் குறித்தும் சில விமர்சனங்களை முன்வைத்து நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார். அதாவது அரசியல் மாற்றத்தை செய்வதற்காக தான் மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸை துவங்கினார். அந்த கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சி பிஜேபியுடன் இணைந்ததன் விளைவு அது கல்லறைக்கு போய்விட்டது. ஒரு அரசியல் மாற்றத்திற்காக தான் கேப்டன் விஜயகாந்த் விளிம்பு நிலை மக்களின் மகத்தான தலைவனாக தேமுதிகவை துவங்கினார்.
அந்த கட்சியை அவர் மனைவி பிரேமலதா விஜயகாந்த், ஐந்தாண்டுகளுக்கு திமுகவுக்கு குத்தகைக்கு விட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியை அரசியல் மாற்றம் தருவதாக துவங்கினார் கமல். அவர் இன்று தனது டார்ச் லைட்டை அறிவாலயத்தில் தேடி கொண்டிருக்கிறார். இவ்வாறு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்து நாஞ்சில் சம்பத் பேசியுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.
குறிப்பாக மதிமுக வைகோ குறித்து அவர் பேசியுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. தவெகவுக்கு பெரியளவில் வைகோ ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், விஜய்யின் காலடியில் வந்து விழுந்து கிடக்கிறார் வைகோ என நாஞ்சில் சம்பத் பேசியுள்ளது மதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
