காவிரி விவகாரத்தில் சர்வாதிகாரியாக நடக்கும் கர்நாடகா முதல்வர்: இபிஎஸ் கண்டனம்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் கர்நாடகா முதல்வர் நடந்து கொள்வது அழகல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டித்து உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீருக்கு பதில் 2.91 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்து விட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 டிஎம்சி நீர். 20 நாட்களில் சுமார் 21 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும்.

ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 டிஎம்சி நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்று வரை முழுமையாகத் திறந்து விடவில்லை.

இந்நிலையில், கர்நாடக முதல்வர், அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழகத்திற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதைக் கேட்கும்போது, ‘கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது ? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.

கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்து விட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள். ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்து விடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.

அதை மதிக்காத கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழக மக்களின் சார்பாக எனது கண்டனங்கள். இம்மாதம் 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாக பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று தவெக- காங். கூட்டணி ஆட்சியின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் இபிஎஸ் கூறி உள்ளார்.

Source link