ஒவ்வொரு மாற்றுத்திறனாளி குழந்தையும் தனித்துவமான திறமைசாலிகள் என்றும், ஒவ்வொரு குழந்தையின் திறமையும் சமூகத்தின் பெருமை என்றும் தமிழக அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். சரியான கல்வியும் ஊக்கமும் கிடைத்தால் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் தங்களது வாழ்வில் மிக உயர்ந்த உயரத்தை எட்டுவார்கள் என்றும் அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை ரத்தினபுரி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காகத் துளிர் சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் 9-ஆம் ஆண்டு விழா கோவை சிவானந்தா காலனியில் உள்ள காமராஜர் கலையரங்கில் நடைபெற்றது. மாற்றுத்திறன் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த விழாவில், தமிழக அமைச்சர் சம்பத்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவின் ஒரு பகுதியாக, அமைச்சர் சம்பத்குமார் “தந்தையுடன் ஒரு நாள்” என்ற குறும்படத்தை வெளியிட்டு, மாணவர்களைப் பாராட்டி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சமூக பங்கேற்பை ஊக்குவிக்கும் இதுபோன்ற முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை என்று குறிப்பிட்டார். மேலும், மாற்றுத்திறனைக் குறையாகப் பார்க்காமல் அவர்களின் திறமையை வளர்க்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சமூக பங்கேற்புடன் கூடிய இதுபோன்ற முயற்சிகள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மிகுந்த ஊக்கமாக அமைகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விழாவை ஒருங்கிணைத்த துளிர் சிறப்புப் பள்ளியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் வெங்கடேசன், பள்ளியின் சேவைகள் மற்றும் இந்த ஆண்டு விழாவின் நோக்கம் குறித்து விரிவாக விளக்கமளித்தார். விழாவின் சிறப்பம்சமாக, மாற்றுத்திறனாளி குழந்தைகள் நடனம், பாடல், நாடகம், பேன்சி டிரெஸ் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது தனித்துவமான திறமைகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தினர்.
செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
