தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் அதிரடி புதிய புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3,000 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 950 திரையரங்குகளில் படம் திரையிடப்பட உள்ளது. அரசியலில் பிஸியாக உள்ள முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படம் இது என்பதால், ரசிகர்களிடையேயும் மக்களிடையேயும் எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் நேற்று முதல் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வெளியாகியுள்ள புதிய புரோமோ முழுக்க முழுக்க விறுவிறுப்பான ஆக்சன் காட்சிகளால் நிரம்பியுள்ளது. இதில் விஜய்யின் கோட்-சூட் தோற்றமும் இடம்பெற்றுள்ளது. புரோமோவின் இறுதியில், சட்டமன்ற பேரவைக் கூட்டத் தொடரில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையை முதலமைச்சர் விஜய் செய்து காட்டியது போன்ற காட்சியும், அவரது கோட்-சூட் தோற்றமும் இணைக்கப்பட்டுள்ளன.
Raavanamavan daa for a reason 🔥#JanaNayaganFromJuly23
The Hon’ble Chief Minister @actorvijay@TheKVNofficial@KvnProductions#HVinoth@hegdepooja@anirudhofficial@thedeol@_mamithabaiju@Jagadishbliss@LohithNK01@RamVJ2412@TSeriespic.twitter.com/zTC6EegRkj
— KVN Productions (@KvnProductions) July 20, 2026
அரசியல் அரங்கில் இந்த சைகை கடும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் கிளப்பியிருந்த நிலையில், அதே போன்ற காட்சி திரைப்படத்திலும் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள தயாரிப்பு நிறுவனம், “Raavanamavan daa for a reason” எனக் குறிப்பிட்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து, பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளிப்போன இத்திரைப்படம் தற்போது ஜூலை 23 அன்று திரைக்கு வரவுள்ளது. விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
