திமுக எம்எல்ஏவான மார்க்கண்டேயன் இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டது, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் மார்க்கண்டேயனை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்து சென்ற சமயத்தில், செய்தியாளர்களிடம் அவர் பேசியுள்ளது வைரலாகி கொண்டிருக்கிறது.
சமீபத்தில் விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொதுக்கூட்டம் ஒன்றில், தவெகவை விமர்சனம் செய்து பேசினார். அதோடு அப்பாவை காணோம் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கிண்டலடிக்கும் விதமாக சட்டமன்றத்தில் விஜய் பேசியதற்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார். மேலும் சட்டமன்றத்தில் கதவுகளை மூடினால், அவருயைய எலும்புகளை உடைத்து அனுப்புவோம் எனவும் கூறியிருந்தார்.
அவருடைய இந்த பேச்சு இணையத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்ததை தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று காலை மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். அவருடைய இந்த கைதை கண்டித்து திமுக தலைவர்கள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட மார்க்கண்டேயனிடம் எட்டு மணி நேரத்திற்கு மேலாக தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவகத்தில் விசாரணை நடந்து வந்தது.
இதனையடுத்து நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்வதற்காக மருத்துவ பரிசோதனை செய்ய தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம், போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள் என்று கூச்சலிட்டார். தொடர்ந்து அவரை பேச முடியாமல் போலீசார் தடுக்க முயன்றனர். அதோடு செய்தியாளர்களையும் மார்க்கண்டேயனிடம் பேட்டி எடுக்க முடியாதவாறு தடுத்தனர்.
இதனிடையில் தன்னை போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர். மார்ச்சுவரி ரூமில் கொண்டு சென்று அடைக்க முயன்றனர் எனவும் பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்தார் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் . அவரின் இந்த புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது. காலையில் கைது செய்யப்பட்ட அவரிடம், கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்கு மேலாகவும் விசாரணை நடந்தது.
இதனையடுத்து அரசு மருத்துவமனையில் முன்வாசல் வழியாக மார்க்கண்டேயன் அழைத்து செல்லப்படாமல், பின்வாசல் வழியாக அழைத்து செல்லப்பட்டுள்ளார். அப்படி இருந்தும் போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக பகீர் குற்றச்சாட்டினை மார்க்கண்டேயன் முன்வைத்துள்ளது பெருமளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதோடு அவரிடம் பத்திரிக்கையாளர்கள் பேச முடியாதபடி காவல்துறையினர் தடுத்த சம்பவமும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
முன்னதாக திமுக முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனை பார்ப்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களிடம் தவெக அரசு மீது, மார்க்கண்டேயன் கைது குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசியிருந்தனர். அதே போல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் மார்க்கண்டேயன் கைதிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
