பாரபட்சமின்றி ஊழியர்கள் இடமாற்றம்: செயலர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை : ‘அனைத்து துறைகளிலும் பாரபட்சமின்றி பணியிடமாறுதல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்’ என, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தவெக ஆட்சி வெளிப்படை தன்மையுடனும், லஞ்சம், ஊழல் இல்லாமலும் நடக்க வேண்டும் என, முதல்வர் விஜய் விரும்புகிறார். இதற்காக, அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை நேர்மையாக பணியாற்ற, பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கி வருகிறார்.

அதன்படி, பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் முதலில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, அனைத்து துறைகளிலும், துணை செயலர் முதல், கீழ்மட்ட ஊழியர்கள் வரை பணியிட மாற்றம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.

கூட்டணி கட்சிகளின் அமைச்சர்கள், தலைவர்கள், த.வெ.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலர்கள் வாயிலாக பரிந்துரை கடிதம் பெற்று, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விருப்ப பணி கேட்டு, பலரும் உயர் அதிகாரிகளிடம் விண்ணப்பித்து உள்ளனர். இதனால், நேர்மையான அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு துாக்கியடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்கு வாயிலாக சிலர் காரியம் சாதிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, இ – மெயில் வாயிலாக முதல்வர் விஜய்க்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. இதையடுத்து, எவ்வித அரசியல் குறுக்கீடும் இன்றி பணியிட மாற்றம் செய்ய, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வெளிப்படை தன்மையுடன் நேர்மையாக இப்பணி நடக்கிறதா என்பதை கண்காணிக்குமாறு, தலைமை செயலருக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

Source link