கள்ள நோட்டு கும்பலின் சர்வதேச தொடர்பு: என்ஐஏ விசாரணை

சென்னை: சென்னையில் கைதான கள்ள நோட்டு கும்பலை சேர்ந்தவர்களின், சர்வதேச தொடர்புகள் குறித்து, என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த ஷபீர் ரஹ்மான், மலேஷியாவை சேர்ந்த புவனேஸ்வரி ஆகியோர், சென்னை திருவல்லிக்கேணியிலும், ரவிச்சந்திரன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியிலும், திருவல்லிக்கேணி போலீசாரால் அடுத்தடுத்து, கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 15 பாஸ்போர்ட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை ஆய்வு செய்தபோது, அவர்கள், பாக்., உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்தது தெரியவந்தது. கள்ள நோட்டு கும்பலின் தலைவியாக புவனேஸ்வரி செயல்பட்டு வந்துள்ளார்.

போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:தமிழகத்தில், சென்னை, மதுரை, நெல்லை என, பல்வேறு பகுதிகளுக்கு சென்று, ஏடிஎம் மையங்களில், கள்ள நோட்டுகளை ‘டிபாசிட்’ செய்ய திட்டமிட்டு இருந்தோம். இதற்காக, நானும் ஷபீர் ரஹ்மானும், மலேஷியாவில் இருந்து கட்டு கட்டாக, கள்ள நோட்டுகளை கடத்தி வந்தோம். ரவிச்சந்திரன் தன் கூட்டாளிகள் வாயிலாக, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைதான மூவருக்கும் சர்வதேச அளவில் தொடர்புகள் உள்ளன. இவர்களின் பின்னணியில் பாக்., பயங்கரவாதிகள் இருக்கலாம் என, சந்தேகம் எழுகிறது. இது குறித்து, என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Source link