நியூஜெர்சி: டோரஸ் ‘சூப்பர்’ கோல் அடிக்க, ஸ்பெயின் அணி உலக கோப்பையை வென்றது. பைனலில் 1-0 என வெற்றி பெற்றது. என்சோ பெர்னாண்டஸ் ‘ரெட் கார்டு’ பெற்றதால், 10 வீரர்களுடன் விளையாடிய அர்ஜென்டினா பரிதாபமாக தோற்றது. மெஸ்ஸியின் மீண்டும் கோப்பை வெல்லும் கனவு தகர்ந்தது.
உலக கோப்பை கால்பந்து தொடரின் 23வது சீசன், அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடந்தது. 48 அணிகள் பங்கேற்றன. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நடந்த பரபரப்பான பைனலில் உலகின் ‘நம்பர்-1’ அர்ஜென்டினா, ‘நம்பர்-2’ ஸ்பெயின் அணிகள் மோதின.
முதல் பாதியில் ஸ்பெயின் அணியினர் துடிப்பாக ஆடினர். ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் லமின் யமால் அடித்த பந்தை அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினஸ் அருமையாக தடுத்தார். 22வது நிமிடத்தில் 39 வயதான மெஸ்ஸி மின்னலாக ஓடி கோல் அடிக்க பார்த்தார். இதை ஸ்பெயின் தற்காப்பு பகுதி வீரர்கள் தடுத்தனர்.
‘டிக்கா-டாக்கா’ பாணியில் ஸ்பெயின் வீரர்கள் தங்களுக்குள் பந்தை பாஸ் செய்த போதும், ‘பினிஷிங்’ இல்லாததால், கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதியில் ஸ்பெயின் அணி கோல் போஸ்ட் நோக்கி 3 ‘ஷாட்’, அர்ஜென்டினா ‘0’ ஷாட் அடித்தன. பந்து, ஸ்பெயின் வசம் 64 சதவீதம், அர்ஜென்டினா வசம் 36 சதவீதம் மட்டும் இருந்தன. இரு அணிகளும் கோல் அடிக்க இயலாததால் முதல் பாதி 0-0 என முடிந்தது.
ரெட் கார்டு அதிர்ச்சி: இரண்டாவது பாதியின் 62வது நிமிடத்தில் ஸ்பெயின் தரப்பில் ஓயர்ஜபாலுக்கு பதில் பெர்ரான் டோரஸ், ரூயிசிற்கு பதில் பெத்ரி களமிறக்கப்பட்டனர். மீண்டும் தவறு செய்த என்சோ பெர்னாண்டஸ் (90+3) இரண்டாவது ‘எல்லோ கார்டு’ பெற ‘ரெட் கார்டு’ காட்டி வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் விளையாடிய அர்ஜென்டினா அணி தடுமாறியது. ‘பிரீ-கிக்’ வாய்ப்பில் லமின் யமால் (90+8) அடித்த பந்தையும் மார்டினஸ் தடுத்தார். இரண்டாவது பாதியிலும் கோல் அடிக்கப்படாததால், போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது.
டோரஸ் கோ…ல்: ஆட்டத்தின் 96வது நிமிடத்தில் ஸ்பெயினின் வில்லியம்ஸ் அடித்த கோல், தவறு என நிராகரிக்கப்பட்டது. பின் போரஸ், வில்லியம்ஸ் உதவ பெர்ரான் டோரஸ் (106வது நிமிடம்) நல்ல உயரத்தில் அடித்த பந்து, கோல் வளைக்குள் செல்ல, ஸ்பெயின் ரசிகர்கள் கொண்டாடினர். மீண்டும் டோரஸ் (113) மின்னலாக ஓடி வந்த அடித்த கோல் ‘ஆப்-சைடு’ என நிராகரிக்கப்பட்டது. 115வது நிமிடத்தில் ‘கார்னர்’ வாய்ப்பில் மெஸ்ஸி அடித்த பந்து ‘மிஸ்’ ஆக, ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் ஸ்பெயின் 1-0 என வென்று, உலக கோப்பையை கைப்பற்றியது. அர்ஜென்டினா அணி ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைக்க தவறியது.
இரண்டாவது முறை
ஸ்பெயின் அணி 2வது முறையாக உலக கோப்பை கைப்பற்றியது. ஏற்கனவே 2010ல் கோப்பை வென்றிருந்தது. அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் 5வது இடத்தை (தலா 2) பிரான்ஸ் (1998, 2018), உருகுவேயுடன் (1930, 1950) பகிர்ந்து கொண்டது ஸ்பெயின்.
முதல் நான்கு இடங்களில் பிரேசில் 5 (1958, 1962, 1970, 1994, 2002), ஜெர்மனி 4 (1954, 1974, 1990, 2014), இத்தாலி 4 (1934, 1938, 1982, 2006), அர்ஜென்டினா 3 (1978, 1986, 2022) அணிகள் உள்ளன.
ரூ. 491 கோடி பரிசு
பைனலில் வென்ற ஸ்பெயின் அணிக்கு ரூ. 491 கோடி பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த அர்ஜென்டினாவுக்கு ரூ. 327 கோடி பரிசாக கிடைத்தது.
308 கோல்
இம்முறை 104 போட்டியில், 308 கோல் பதிவானது. இது, ஒரு சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச கோல் ஆனது. இதற்கு முன், 2022ல் 172 கோல் பதிவானது.
* இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் அதிகபட்சமாக தலா 20 கோல் அடித்தன.
* பிரான்சின் எம்பாப்வே, அதிகபட்சமாக 10 கோல் அடித்தார்.
* மொத்தம் 14 ‘சேம்சைடு’ கோல் அடிக்கப்பட்டன. எகிப்தின் முகமது ஹானி, அதிகபட்சமாக 2 ‘சேம்சைடு’ கோல் அடித்தார்.
* பிரான்சின் மைக்கேல் ஒலிசே, அதிகபட்சமாக 7 ‘அசிஸ்ட்’ செய்தார்.
முதல் வீரர் எம்பாப்வே
அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் பிரான்சின் எம்பாப்வே முதலிடத்தை தட்டிச் சென்றார். இவர், 8 போட்டியில், 10 கோல் அடித்தார். இதனையடுத்து அதிக கோல் அடித்தவருக்கான ‘கோல்டன் பூட்’ விருதை தொடர்ந்து 2வது முறையாக (2022, 2026) தட்டிச் சென்றார். இவ்விருதை இரண்டு முறை பெற்ற முதல் வீரரானார் எம்பாப்வே.
* சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருதை ஸ்பெயினின் ரோட்ரி வென்றார்.
