ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விசாரணை; எஸ்.ஐ.டி., வசமே ஒப்படைக்க கோர்ட் அறிவுறுத்தல்

டில்லி சிறப்பு நிருபர்

அயோத்தி ராமர் கோவில் நன்கொடையில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களை எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவே விசாரணை நடத்துவதற்கான சாத்தியகூறுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க கூடாது எனவும் எச்சரித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., அரசு நடக்கிறது. பிரசித்தி பெற்ற அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள், காணிக்கைகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. மாநில அரசு அமைத்த மூன்று பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு, முறைகேடுகள் நடந்ததை உறுதி செய்தது. இதையடுத்து, வழக்கு பதிந்த உள்ளூர் போலீசார் இதுவரை எட்டு பேரை கைது செய்துள்ளது.

இந்நிலையில், நன்கொடை முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், ‘ராமர் கோவில் அறக்கட்டளையின் ஒட்டுமொத்த நிதி வரவு – செலவுகளை மத்திய தணிக்கை துறை அல்லது தடயவியல் தணிக்கை மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்’ என, ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி., சுதாகர் சிங் உள்ளிட்டோரும் மனுத் தாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், ”வெறும் வாய் வார்த்தையாக எச்சரிக்கிறோம். இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். நீதிமன்றங்கள் அரசியல் செய்வதற்கான இடமல்ல. குற்றவியல் நடவடிக்கை சார்ந்த ஒரு எளிய வழக்கு இது. நேர்மையாகவும், முறையாகவும் விசாரணை நடப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்,” என்றார்.

உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அதை ஆராய்ந்த நீதிபதிகள், ‘விசாரணையை நடத்துவது யார்?’ என, கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, ”நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தவுடன், அதன் உண்மைதன்மையை கண்டறியவே மாநில அரசு, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. குற்றம் நடந்திருப்பதை இக்குழு உறுதி செய்ததால், மாநில போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்,” என்றார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விசாரணையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, சிறப்பு புலனாய்வு குழுவிடமே முதன்மை விசாரணையை ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? இது பற்றி மாநில அரசு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இவ்வழக்கு விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Source link