புதுடில்லி: ‘‘காமன்வெல்த் விளையாட்டில், இந்திய ‘பாரா’ நட்சத்திரங்கள் பதக்கம் வென்று சாதிப்பர்,” என, இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜாரியா தெரிவித்தார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், வரும் ஜூலை 23 முதல் ஆக. 2 வரை காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கவுள்ளது. இந்தியா சார்பில் 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் என, மொத்தம் 126 பேர், 8 வகையான விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாரா’ விளையாட்டு போட்டிகளும் இடம் பெற்றுள்ளன. இதற்கான 29 பேர் கொண்ட இந்திய ‘பாரா’ நட்சத்திரங்கள் டில்லியில் இருந்து ஸ்காட்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களுக்கு வழியனுப்பும் விழா நடத்தப்பட்டது.
கடந்த 2002ல் மான்செஸ்டரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில், ‘பாரா’ போட்டிகள் அறிமுகமாகின. இதில் இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்தன. கடந்த 2022ல் பர்மிங்காமில் நடந்த போட்டியில் இந்தியாவின் சுதிர் (‘பாரா பவர்லிப்டிங்’), பவினா படேல் (பாரா டேபிள் டென்னிஸ்) தங்கம் வென்றனர்.
இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜாரியா கூறுகையில், ”கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் இந்திய ‘பாரா’ நட்சத்திரங்கள் சிறப்பாக செயல்படுவர். குறைந்தபட்சம் 5 முதல் 6 பதக்கம் வெல்வர் என எதிர்பார்க்கிறேன்,” என்றார்.
