பழநி கோவில் நில விவகாரத்தில் சிக்கும் சென்னை அதிகாரி யார்?

சென்னை:பழநியில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் அவசர அவசரமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சார் – பதிவாளர் பின்னணியில் இருந்து செயல்பட்ட சென்னை உயரதிகாரிகள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பழநி தண்டாயுதபாணி கோவில் மடத்துக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம், 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. பழநி கோவிலுக்காக பக்தர் ஒருவர், 1888ல், மடத்தின் பெயரில் தானமாக கொடுத்த நிலம், தனியார் சிலரால் அபகரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1999ம் ஆண்டு முதல், மடத்தின் நிர்வாகத்தில் உரிமை கொண்டாடும் சிலர், இந்த நிலத்தை வெளியாட்களுக்கு விற்க முயற்சித்து உள்ளனர். அறநிலையத்துறை தலையீட்டால், இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஜூலை 6ல் இந்த நிலம் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமானது என்று கூறி, தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கான பத்திரம் பதிவான போது தான், பிரச்னை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ததுடன், பின்னணி குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாது, பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி., ஒருவர் தலைமையில், தனி குழுவும் விசாரணையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பத்திரத்தை பதிவு செய்த சார் – பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில், பதிவுத்துறை தரப்பில் நடந்த விவகாரங்கள் குறித்து, உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பதிவுத்துறையில் பெரும்பாலான சார் – பதிவாளர்களுக்கு, ‘டிஜிட்டல்’ கையெழுத்து வசதி உள்ளது. இதன் அடிப்படையில், பத்திரப்பதிவு பணியில் ஈடுபட, மேலதிகாரிகளால் நியமிக்கப்படும் நபர்களுக்கு மட்டும், இணையதளத்தில் நுழைவதற்கான ‘லாக் இன்’ வசதி செயல்பாட்டில் இருக்கும்.

பதிவு பணியில் இல்லாத சார் – பதிவாளர்களுக்கு, இந்த வசதி முடக்கி வைக்கப்பட்டு இருக்கும். பதிவு அல்லாத பணியில் இருந்தாலும், சார் – பதிவாளர்கள் இந்த வசதியை பயன்படுத்த முடியாது.

பதிவு அல்லாத பணியில் உள்ள ஒரு சார் – பதிவாளரை, பதிவு பணிக்கு அனுப்பும்போது, அவருக்கு இணையதளத்திற்குள் நுழையும் ‘லாக் இன்’ வசதியை, சம்பந்தப்பட்ட மண்டல டி.ஐ.ஜி., நிலையில் இருப்பவர்கள் தான் அனுமதிக்க முடியும். அதுவும், துறையின் உயரதிகாரிகள் அறிவுறுத்தல் அடிப்படையில் தான் இதை செய்ய முடியும்.

இந்நிலையில், பழநி விவகாரத்தில், ஒட்டன்சத்திரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில், சீட்டு சங்கங்களுக்கான சார் – பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், ஜூலை 4ம் தேதி பழனி சார் – பதிவாளர் அலுவலகத்துக்கு தற்காலிக அடிப்படையில் அனுப்பப்பட்டார்.

அவருக்கு இணையதள நுழைவு ‘லாக் இன்’ அனுமதி அளித்தது யார்? எப்போது அளித்தார் என்பது குறித்து, தற்போது பதிவுத்துறை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும், மார்ச் 27ம் தேதி கையெழுத்திடப்பட்ட பத்திரம், அப்போதே பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இருந்த சார் – பதிவாளர், உரிமையியல் வழக்கு இருப்பதாக கூறி, பதிவு செய்ய மறுத்துள்ளார். இதை எதிர்த்து, நிலத்தை விற்ற தண்டபாணி என்பவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

அதை விசாரித்த தனி நீதிபதி, தகுதி அடிப்படையில் பரிசீலித்து, பத்திரத்தை மூன்று வாரத்துக்குள் பதிவு செய்ய, ஏப்., மாதம் உத்தரவிட்டுள்ளார். இதில் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள், சம்பந்தப்பட்ட நபர்கள், சார் – பதிவாளர் அலுவலகத்தை அணுகவில்லை.

பழநி சார் – பதிவாளர் விடுப்பில் போன நிலையில், நீதிமன்ற காலக்கெடு காலாவதி ஆன நிலையில், ஜூலை 6ம் தேதி பத்திரம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிந்து விட்டதாகக் கூறி, பத்திரத்தை தற்காலிகமாக அங்கு பணியமர்த்தப்பட்ட ஜஸ்டின் மணிகண்டன் நிலுவையில் வைத்திருக்கலாம்.

மாவட்ட பதிவாளருடன் கலந்தாலோசித்து, இதில் அவர் முடிவு செய்திருக்கலாம். ஆனால், இந்த நடைமுறைகளை மீறி, ஜஸ்டின் மணிகண்டன் இந்த பத்திரத்தை அவசர கதியில் பதிவு செய்து கொடுத்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் இருந்து பதிவுத்துறை மேலதிகாரிகள் யாராவது, ஜஸ்டின் மணிகண்டனுக்கு உத்தரவுகள் பிறப்பித்தனரா என்பது குறித்தும், உயதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஜஸ்டின் மணிகண்டன் தானாக இதை செய்தாரா அல்லது பின்னால் இருந்து மேலதிகாரிகள் யாராவது அவரை இயக்கினரா என்ற அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link