தமிழக மக்களின் காவல் தெய்வமான கருப்புசாமி உருவத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முகத்தைப் பொருத்தி திருச்சியில் வைக்கப்பட்டுள்ள பேனருக்கு இந்து தமிழர் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் உள்ள இந்த பேனரை உடனடியாக அகற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இந்து மதத்தின் காவல் தெய்வம் கருப்புசாமி உருவத்தில் தமிழக அமைச்சர் புஸ்ஸிஆனந்த் படம் உடனடியாக அகற்றப்பட வேண்டும், பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். கருப்பசாமி படம் வரைந்தது போல் கர்த்தர் இயேசுநாதர் உருவத்தில் புஸ்ஸிஆனந்த் படத்தையோ, முதல்வர் விஜய் படத்தையோ டிசைன் செய்து பேனர் வைப்பார்களா? ஆர்வக்கோளார்களுக்கு அறிவுரை வழங்குங்கள் என இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் வேண்டுகோள் மற்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளரிடம் அவர் தெரிவித்ததாவது:
கருப்பசாமி என்பது தமிழக மக்களால் காவல் தெய்வமாகவும், நீதியின் அடையாளமாகவும் ஆழ்ந்த பக்தியுடன் வழிபடப்படும் இந்து தெய்வம் ஆகும். இந்த பேனர் திருச்சி நால்ரோடு புத்தூர் சிக்னல் அருகில் வைக்கப்பட்டிருக்கிறது .
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தப் பேனரில், கருப்பசாமி உருவத்தை ஒத்த வடிவத்தில் ஒரு அரசியல் நபரின் முகத்தை இணைத்து காட்சிப்படுத்தியிருப்பது, இந்து மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக பலர் கருதக்கூடும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/07/20/tvk-poster-1-2026-07-20-23-04-45.jpeg)
அரசியல் தலைவர்களைப் பாராட்டும் நோக்கத்தில் நடத்தப்படும் விளம்பரங்களில், இந்து தெய்வங்களின் திருவுருவங்களை மாற்றியமைத்து அல்லது மனிதர்களின் முகங்களை இணைத்து பயன்படுத்தும் நடைமுறை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மத நம்பிக்கைகளும், அரசியல் விளம்பரங்களும் ஒன்றுடன் ஒன்று கலக்கப்படுவது சமூக நல்லிணக்கத்திற்கு ஏற்றதல்ல.
எனவே இந்தப் பேனரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற மத உணர்வுகளைப் பாதிக்கும் பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்கள் இனி இடம் பெறாத வகையில் அரசு மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த மதத்தினரின் வழிபாட்டு சின்னங்களாக இருந்தாலும் அவற்றை அரசியல் விளம்பரங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மத நம்பிக்கைகளை மதிப்பதும், அனைத்து சமூகங்களின் உணர்வுகளையும் பாதுகாப்பதும் ஜனநாயக சமூகத்தின் அடிப்படை பொறுப்பாகும்.
எந்த மதத்தின் தெய்வங்களையும் அரசியல் விளம்பரங்களுக்காக பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வழியாகும். தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். கட்டவுட் வைக்க கூடாது என்று எவ்வளவு அறிவுரை வழங்கினாலும் திராவிட மாடல் செய்ததையே புதிய அரசும் செய்கிறது .
கடந்த 18.07.2026 அன்று மாண்பமை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பொது இடங்களில் ஜாதி பெயர் படங்களுடன் பேனர்கள் பிளக்ஸ் அகற்ற உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது . கோர்ட்டு என்ன உத்தரவு பிறப்பித்தாலும் அதை மதிக்க மாட்டோம் என்ற நிலையில் தமிழக வெற்றிக்கழக கட்சியினர் செயல்படுவதற்கு இதுவும் ஒரு சான்று எனத் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி
