போர்ச்சூழலிலும் 7.7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளோம்: பிரதமர் பேச்சு

– நமது டில்லி நிருபர் –

”மேற்காசியாவில் போர்ச் சூழல் நிலவி வந்தபோதிலும், நம் நாடு, 7.7 சதவீத வளர்ச்சி விகிதத்தை தக்கவைத்துக்கொண்டு, உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் நேற்று பேசியதாவது:

நம் நாடு புரிந்துவரும் சாதனைகள் குறித்து மக்கள் பெருமிதம் கொள்கின்றனர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் இந்த சாதனைகள் தொடர்ந்து வருகின்றன. அந்த வரிசையில், இப்போது விண்வெளித் துறையில் நாம் சாதனை படைத்து உள்ளோம்.

சாதனை

கடந்த காலத்தில், ஒரே ஒரு இந்தியக் குடிமகன், சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார். இப்போதோ, ஒரு இளம் இந்திய ‘ஸ்டார்ட் – அப்’ நிறுவனம், விண்வெளிப் பயணத்தில் சாதனை படைத்துள்ளது.

உலகில் உள்ள மிகச் சில நாடுகளில் மட்டும்தான், இத்தகைய தனியார் நிறுவனம் மூலம் துணிச்சலான முயற்சிகள் வெளிப்பட்டுள்ளன. அந்த நாடுகளின் வரிசையில், இந்திய இளைஞர்கள் தங்களது திறமையால், விண்வெளியில் புதிய பயணங்களை மேற்கொண்டு சாதித்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய வெற்றி.

சராசரியாக, 28 வயதுடைய இளைஞர்களை கொண்ட இந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம், விண்வெளியில் இந்திய கொடியை ஏற்றியுள்ளது.

அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இத்தகைய நிகழ்வுகளே, இந்தியாவுக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. இதன்மூலம், உலக அரங்கில், இந்தியாவின் நிலைப்பாடு பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

நாடு மேற்கொண்ட சீர்திருத்தங்களின் விளைவாகவே இன்றைய சாதனைகள் சாத்தியமாகியுள்ளன.

மேற்காசியாவில் நிலவும் போர்ச்சூழல், எரிசக்தி, பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி., உரங்கள் மற்றும் ரசாயனங்கள் போன்றவற்றுக்கு, மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பல தடைகளையும், நெருக்கடிகளையும் நாம் எதிர்கொண்ட போதிலும், 7.7 சதவீத வளர்ச்சி விகிதத்துடன், உலகின் முக்கியப் பொருளாதாரங்களில், மிக வேகமாக வளரும் நாடாக நாம் திகழ்கிறோம்.

பார்லிமென்ட்டின் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும்போது, நாடு ஒரு புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளதாக கருதுகிறேன். பார்லிமென்ட் சிறப்பாக செயல்படுவதன் மூலம், அந்த உத்வேகத்திற்குப் புதிய ஆற்றலை அளிக்க முடியும்.

அழைப்பு

இந்த சபையில், கருத்துகளுக்குச் சரியான தளம் வழங்கப்பட வேண்டும். எனவே, உண்மைகளும் வாதங்களும் முன்வைக்கப்படும்போது, கூச்சலும் அமளியும் தேவையில்லை.

வாதங்கள் வலுவாகவும், உண்மைகள் ஆணித்தரமாகவும் இருந்தால், அமைதியான மனதுடன் கூட ஒருவரின் குரலை, வலுவாக ஒலிக்கச் செய்ய முடியும்.

சபையில் நடைபெறும் விவாதங்கள் அனைத்தும், உண்மைகளால் செழுமைப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு குரலுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கருத்தும், மதிக்கப்பட வேண்டும்.

இதுவே பார்லிமென்ட்டில் நாம் பங்கேற்பதன் அடையாளமாக இருக்க முடியும். எனவே, அனைத்து எம்.பி.,க்களுக்கும், பார்லிமென்ட்டில், உற்சாகத்துடன் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

56 வயது இளைஞன்!
பிரதமர் தன் பேச்சின்போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை மறைமுகமாக கிண்டலடிக்கும் விதமாக, ”விண்வெளியில் சாதனை படைத்த, ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்கள் குழுவின், சராசரி வயது வெறும் 28 மட்டுமே என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய இளம் வயதினர், இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த நேரத்தில், 56 வயது உடையவர்களைப் பற்றி நான் பேசவில்லை,” என்றார்.

Source link