டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க ஜப்பானின் 'கியூடெங்கா' தடுப்பூசி

புதுடில்லி: நாடு முழுதும் டெங்கு காய்ச்சல் நோய் பரவலை ஒழிக்கும் வகையில், ‘கியூடெங்கா’ என்ற டெங்கு தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த மத்திய அரசு முதல் முறையாக அனுமதி அளித்துள்ளது. ‘டகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ்’ நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசியை 4 – 60 வயது நிரம்பியவர்கள் வரை அனைவரும் செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலங்களில் நாடு முழுதும் டெங்கு காய்ச்சல் நோய் பரவுவது வழக்கமாகி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் நம் நாட்டில் டெங்கு பாதிப்பு 11 மடங்கு அதிகரித்து இருப்பதாக புள்ளிவிபரங்கள் எச்சரிக்கின்றன.

குறிப்பாக, டெங்குவின் நான்கு வகையான வைரஸ்களும் ஒரே நேரத்தில் பரவி வருவதால், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளோரின் உயிரை பறிக்கும் அளவுக்கு மிகுந்த ஆபத்தான நோயாக டெங்கு அச்சுறுத்தி வருகிறது.

43 நாடுகள்

எனவே, டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2022ல் கிழக்காசிய நாடான ஜப்பானை சேர்ந்த உலகின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான, டகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் கண்டுபிடித்த, கியூடெங்கா என்ற தடுப்பூசியை நம் நாட்டிலும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில், இந்த தடுப்பூசியை 43 நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இதுவரை 3.2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முன், 28,000 பேருக்கு செலுத்தி, 19 கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் திருப்தி ஏற்பட்ட நிலையில், கியூடெங்கா தடுப்பூசியை உலக அளவில் சந்தைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

வலுவடையும்

நம் நாட்டிலும் இந்த தடுப்பூசி தொடர்பாக நடந்த மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. சோதனையில் பாதுகாப்பு தன்மை, நோய் எதிர்ப்பு திறன் ஆகியவை உறுதி செய்யப்பட்டன.

தவிர, டெங்குவின் நான்கு வகையான வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக, ஏழு ஆண்டுகள் வரை நீடித்த பாதுகாப்பை இந்த தடுப்பூசி வழங்கும் என ஆய்வில் தெரியவந்தது.

மேலும், உலக சுகாதார அமைப்பும் இந்த தடுப்பூசியின் தரம் மற்றும் பாதுகாப்பை அங்கீகரித்து, நோய் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பயன்படுத்தலாம் என பரிந்துரைத்து உள்ளது.

இதையடுத்து நம் நாடு முழுதும் 4 – 60 வயது நிரம்பியவர்கள் வரை அனைவருக்கும் இந்த தடுப்பூசியை செலுத்தலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, ‘பயாலஜிக்கல் இ’ என்ற நம் நாட்டின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனத்துடன் கைகோர்த்து, டகேடா நிறுவனம், ஆண்டுக்கு 5 கோடி தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு பிரசாரங்களுடன், இந்த தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வருவதால், நாட்டின் பொது சுகாதார கட்டமைப்பு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link