பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகள்: ஐகோர்ட் வேதனை

சென்னை: ‘பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது, குழந்தைகள் அனுபவிக்கும், மன ரீதியான அழுத்தங்களை, நம் சமூகத்தில் பலர் புரிந்து கொள்ளவில்லை’ என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில், ஆடு மேய்க்க சென்ற 10 வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு அளித்ததாக, அதே ஊரை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு எதிராக, செஞ்சி அனைத்து மகளிர் போலீசார், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில், சாட்சியம் அளித்த, பாதிக்கப்பட்ட சிறுமியை, குறுக்கு விசாரணை செய்வதற்காக, மீண்டும் ஆஜர்படுத்தக் கோரி, குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை, விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில், ரமேஷ் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கவே, ‘போக்சோ’ சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது. கடுமையான தண்டனைகள் விதிக்க வகை செய்யும், இந்த சட்டத்தை அமல்படுத்தும் போது, பாதிக்கப்பட்ட குழந்தைகள், மீண்டும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்கும் வகையில் அமல்படுத்த வேண்டும்.

மீ ண்டும், மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து, தன க்கு நேர்ந்ததை சொல்லும்படி, குழந்தைகளை வற்புறுத்த முடியாது. மேலும், தனக்கு நேர்ந்த துயரத்தை பெற்றோர், குழந்தைகள் நல குழு, மருத்துவர்கள், போலீசார் மற்றும் நீதிபதியிடம் தெரிவிப்பதன் வழியே, தாங்க முடியாத மன அழுத்தத் துக்கு ஆளாகும் சிறுமியை, மீண்டும், மீண்டும் நீதிமன்றத்திற்கு வரவழைப்பதால், அந்த சிறுமி இரண்டாவது முறையாகவும் துன்புறுத்தப்படுகிறார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும்போது, குழந்தைகள் அனுபவிக்கும் மன அழுத்தங்களை, நம் சமூகத்தில் பலர் புரிந்து கொள்ளவில்லை. நியாயமான விசாரணை என்ற பெயரில், குழந்தைகளின் உரிமைகளை மீற அனுமதிக்க முடியாது. எனவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Source link