மதுரை: ”தி.மு.க., ஆட்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் வெள்ளை அறிக்கை வெளியிட உத்தரவிட வேண்டும்” என ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
பழநி கோயிலின் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தது தொடர்பாக 14 பேரை கைது செய்து சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வருகிறது. இதுபோல் மற்ற கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என விசாரித்து வருகிறோம் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். இதற்கிடையே கடந்த தி.மு.க., ஆட்சியில் அறநிலையத்துறையின் செயல்பாடுகள், முறைகேடுகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என முதல்வர் விஜய்க்கு ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மதுரையில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொருளாளர் ஆதிசேஷன் கூறியதாவது: பழநி நிலமோசடி தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும்.
நேற்றுமுன்தினம் பழநியில் நடந்த எங்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழுவில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றினோம். தி.மு.க., ஆட்சியில் கமிஷன் பார்ப்பதற்காக கோயில் இடங்களில் தேவையின்றி ‘பார்க்கிங்’ கட்டப்பட்டன. தொடர்ந்து கட்ட டெண்டர் விடப்பட்ட நிலையில் த.வெ.க., அரசு அதை ரத்து செய்தது.
கடந்த ஆட்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்து த.வெ.க., அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளுக்காக ஆகமத்தை மீறி கோயிலை திறந்து பூஜை செய்யக்கூடாது. அனைத்து கோயில்களின் விரிவான சொத்துப்பட்டியலை வெளியிட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகைக்கு, குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள் சரிபார்க்கப்பட்டு அரசின் வழிகாட்டு மதிப்பின் படி நிர்ணயித்து தொகை வசூலிக்க வேண்டும்.
கோயில்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால் பூஜை, சடங்கு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. காலி பணியிடங்களை தகுதியின் அடிப்படையில் நிரப்ப வேண்டும். கோயில்களில் தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் நீதிமன்ற உத்தரவுபடி திருக்கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றார்.
