சென்னை: விழுப்புரத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள், 1,150 பேர் தங்களின் கட்சி பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் சண்முகம் செயல்பட்டு வருகிறார். சண்முகத்தின் விழுப்புரம் மாவட்ட செயலர், அமைப்பு செயலர் உள்ளிட்ட கட்சி பதவிகளை பழனிசாமி பறித்தார்.
சண்முகம் ஆதரவாளர்களின் பொறுப்புகளையும் பறித்து, புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இதனால், விழுப்புரம் மாவட்டத்தில், இரு கோஷ்டிகள் உருவாகி, மோதல் வெடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை திண்டிவனத்தில் சண்முகம் ஆதரவாளர்கள் குவிந்தனர்.
அங்கு, மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகளிடம் இருந்து ராஜினாமா கடிதம் பெறப்பட்டது.
அதில், ‘அ.தி.மு.க., பொதுச்செயலருக்கு நீக்கல் அதிகாரம் மட்டுமே இருப்பதால், உங்கள் தலைமையில் வகித்து வந்த கட்சிப் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தொண்டர்களாக பயணிக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஐந்து பஸ்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கார்களில் சென்னை வந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு சென்று, ராஜினாமா கடிதங்களை கொடுக்க திட்டமிட்டனர்.
இதையறிந்த, பழனிசாமி ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தில் கூடினர். இதனால், வன்முறை ஏற்படும் என கருதிய போலீசார், சண்முகம் ஆதரவாளர்களிடம் பேச்சு நடத்தினர்.
இதையடுத்து, முன்னாள் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., அர்ச்சுனன் உள்ளிட்ட சிலர் மட்டும், கட்சி அலுவலகம் சென்று, 1,150 பேரின் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.
