உங்க பையன் தான் உங்க கூட இல்ல: கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மகன் ஆவேசம் – arrested dmk mla markandeyan son criticized cm joseph vijay

விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேற்றைய தினம் காலையில் கைது செய்யப்பட நிலையில், கிட்டத்தட்ட அவரிடம் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ மகன் அக்சய் மார்க்கண்டேயன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளது பெருமளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசினார். குறிப்பாக கரூரில் சட்டசபையில் பேசினாலே எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துவிடுகின்றனர். இதனால் சட்டமன்ற கதவுகளை அடுத்தமுறை மூட போவதாக கருத்து ஒன்றினை தெரிவித்திருந்தார் முதல்வர் விஜய். இதனை குறிப்பிட்டு சட்டசபையின் கதவுகளை மூடினால் எலும்பை உடைப்போம் என எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியிருந்தார்.

அவருடைய இந்த பேச்சு தான் சர்ச்சைகளை கிளப்பியது. இதனையடுத்து முதல்வரை மிரட்டும் தொனியில் பேசியதாக அவர் மீது தவெக நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் கைது செய்யப்பட அவர், நேற்றிரவு தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதனையடுத்து எம்எல்ஏ மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட மார்க்கண்டேயன் மகன் அக்சய் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாண்புமிகு முதல்வர் உங்க பையன் தான் உங்க கூட இல்ல. என் அப்பா எனக்காகவும், விளாத்திக்குளம் மக்களுக்காகவும் ரொம்ப காலமாக உழைத்து கொண்டிருக்கிறார். அவர் எங்களுடன் இருக்கனும் ஆசைப்படுறோம். இப்படியெல்லாம் பண்ணாதீங்க சார். சட்டமன்றத்துக்குள் எல்லாரையும் அடைச்சு வைக்கனும் என்று இந்த முதல்வர் சொல்றார்.

அப்படியென்றால் அதனை கைப்பற்றி அவர்கள் நினைப்பதை எல்லாம் சட்டமாக இயற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றார். தொடர்ந்து ஒரு அவதூறு வழக்கில் எவ்வளவு நேரம் விசாரிக்க முடியும். ஒரு மணி நேரம் விசாரிக்கலாம். பேசுன வீடியோவே ஐந்து நிமிஷம் தான் எனும் போது, 13 மணிநேரம் விசாரித்துள்ளனர். அவர் ஒரு சுகர் பேஷன்ட். இதய பிரச்சனையும் இருக்கிறது. அவரை பயமுறுத்துறாங்க. துப்பாக்கி முனையில் அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதே கருத்தை சொல்ல வேண்டுமென மிரட்டுகிறார்கள் என்றார்.

தொடர்ந்து துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டுவதாக மார்க்கண்டேயன் முன்வைத்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மை என்றும் தெரிவித்தார் அக்சய். வெளியே வந்து அவர் சொன்னதை சொல்ல வேண்டும். துப்பாக்கி முனையில் மிரட்டியதை சொல்லக்கூடாது. துப்பாக்கி முனையில் மிரட்டியது உண்மை தான் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் மார்க்கண்டேயன் மகன் அக்சய். அவருடைய இந்த பேட்டி தற்போது பெரியளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனைக்காக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம், துப்பாக்கி முனையில் தன்னை போலீசார் மிரட்டுகின்றனர். மார்ச்சுவரியில் அடைப்பதற்கு முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link