-நமது நிருபர்-
”ஒருவர் கற்கும் கல்வியால், சமுதாயமும், தேசமும் பயன் பெற வேண்டும்,” என்று கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் நடந்த விழாவில் கவர்னர் அர்லேக்கர் பேசினார்.
அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் 3,500-க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியான தீக்ஷாரம்பம் 2026-ஐ கவர்னர் தொடங்கி வைத்தார். அம்ருதா சர்வதேச சட்டப் பள்ளியின் முதன்மை விரிவுரைத் தொடரான அம்ருதா லெக்ஸ் இனிஷியோ 2026-ஐயும் அவர் அறிமுகப்படுத்தினார்.கவர்னர் பேசியதாவது:
கல்வி என்பது பட்டங்களைப் பெறுவதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அறிவின் பின்னணியில் உள்ள விழுமியங்களைப் புரிந்துகொண்டு அவற்றை தங்கள் வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.
தீக்ஷா என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட துறையில் கற்றலின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றாலும், ஷிக்ஷா என்பது வாழ்நாள் முழுவதுமான பயணம். மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதைப் பயிற்சி செய்து பார்க்க வேண்டும். சிறப்பான செயல்பாடு, புதுமை மற்றும் சேவையின் மூலம் விக்சித்பாரத் 2047 தொலைநோக்கு பார்வைக்கு மாணவர்கள் பங்களிக்க வேண்டும்.இவ்வாறு கவர்னர் பேசினார்.
முன்னதாக, அம்ருதா விஸ்வ வித்யாபீடம் பதிவாளர் டாக்டர் பிபின் நாயர் அனைவரையும் வரவேற்றார். மாதா அம்ருதானந்தமயி மடத்தின் பொதுச் செயலாளர் சம்பூஜ்ய சுவாமி பூர்ணாம்ருதானந்தபுரி ஆசியுரை வழங்கினார். அம்ருதா விஸ்வ வித்யாபீடம் வேந்தரான அம்மா சத்குரு ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி, காணொளி மூலம் தனது ஆசிகளைப் பகிர்ந்து கொண்டார்.
அம்ருதா சர்வதேச சட்டப் பள்ளியின் டீன் டாக்டர் அனில் ஜி. வாரியாத் அம்ருதா லெக்ஸ் இனிஷியோ 2026 பற்றிய கண்ணோட்டத்தை வழங்கினார். கோயம்புத்தூர் வேளாண் அறிவியல் பள்ளியின் டீன் பேராசிரியர் சுதீஷ், அம்ருதா வணிகப் பள்ளியின் டீன் டாக்டர் நவா சுப்பிரமணியம், அம்ருதா பொறியியல் பள்ளியின் டீன் டாக்டர் சசங்கன் ராமநாதன் பேசினர்.
பொறியியல், வணிகம், சட்டம், இயற்பியல், கணினியியல், செயற்கை நுண்ணறிவு, கலை, மனிதநேயம் மற்றும் வணிகம், கட்டிடக்கலை, வேளாண்மை, மற்றும் சமூக மற்றும் நடத்தை அறிவியல் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்விப் பயணத்தின் தொடக்கத்தை தீக்ஷாரம்பம் 2026 குறிக்கிறது.
வரும் நாட்களில், மாணவர்கள் யோகா மற்றும் தியானம், உலகளாவிய மனித மதிப்புகள், துறை சார்ந்த அறிமுகம், ஊக்கமளிக்கும் பேச்சுகள் மற்றும் வளாக அறிமுகம் தொடர்பான அமர்வுகளில் பங்கேற்பர்.
