புதுடில்லி: நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார் என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த தகவல்கள் வெளியான உடனேயே அரசு விரைந்து செயல்பட்டது.
இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக பிரதமர் கூறினார். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், தேர்வு முறையில் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது.
மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, நீட் மறுதேர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அது வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்பட்டதாகவும் மோடி குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இதுபோன்ற வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
இத்தகைய தீவிரமான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது முன்மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுவதையும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதையும் உறுதிசெய்யும் வகையில், நாட்டின் சிறந்த வழக்கறிஞர்களின் உதவியுடன் அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பல்வேறு நாடுகளுடன் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பிரதமர் தேஜ கூட்டணி எம்.பி.க்களிடம் விளக்கினார். கடந்த சில மாதங்களில் நாடு அடைந்துள்ள சாதனைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.
அவர் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.
