பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் தொகுதிகளை மறுவரையறை செய்வது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்து, அதற்கு ஒப்புதல் பெறுவது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளின் ஆதரவையும் பெற பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவைச் சேர்ந்த ஆறு மக்களவை உறுப்பினர்கள், ஏக்நாத் ஷிந்தே தலைமையிலான சிவசேனாவில் இணைந்ததன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இணைந்துள்ளனர். அதேபோல், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நான்கு பேர் ராஜினாமா செய்தனர். அவர்களில் மூவர் பாஜக வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளனர். அவர்களை வரவேற்பதும் இன்றைய கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.
