நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், முதல்வர் விஜய் தலைமையில், அவரது நூற்றாண்டு விழா நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன். 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமகமான இவர், அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து, முன்னணி நடிகராக வலம் வந்த இவர், தனது வாழ்நாளின் இறுதிவரை திரைப்படங்களில் நடித்து வந்தார். தங்க பதக்கம், உயர்ந்த மனிதன், பாசமலர், என தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
1999-ம் ஆண்டு வெளியான பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்துடன் தனது திரையுலக பயணத்தை முடித்துக்கொண்ட சிவாஜி கணேசன், கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி மரணமடைந்தார். இன்றுடன் அவர் இறந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் என்று அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபு ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளனர்.
இது குறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், சிவாஜி கணேசன் ஐயா ரசிக பெருமக்களுக்கும், நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஐயாவின் நூற்றாண்டு தமிழ்நாட்டில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ்நாடு எப்படி பெருமை கொள்கிறதோ, திரையுலகம் எப்படி அவரது திறமையை போற்றுகிறதோ அப்படி சரித்திரமே வியக்கும் வண்ணம், மிக சிறப்பான ஒரு விழாவாக மாண்புமிக முதல்வர் தலைமையில், சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா நடத்தப்படும் என்று சொல்லிக்கொள்கிறேன்.இது எங்கள் கடமை, நன்றிக்கடன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய நடிகர் பிரபு, 2028-ம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 100-வது பிறந்த நாள் வருகிறது. அதனை தானே முன்னின்று நடத்தி தருவதாக முதல்வர் விஜய் உறுதி அளித்திருக்கிறார். அந்த நாளுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
