தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5ல் தாக்கல்

சென்னை: ”2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படும்” என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.

பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு துறை அதிகாரிகளுடனும் முதல்வர் விஜய் தனித்தனியே ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று (ஜூலை 21) நிருபர்களிடம் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது:

2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். ஆகஸ்ட் 6ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடத்தப்படும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். ஓட்டளித்த வாக்காளர் பெருமக்களும், ஓட்டளிக்காதவர்களும் கூட இன்றைக்கு வியந்து போற்றி பாராட்டக்கூடிய அளவில் இந்த பட்ஜெட் இருக்கும் என்று நம்புகிறேன்.

பட்ஜெட் கூட்டத்தொடரை முழு நேரலை செய்ய வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறினார்.முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் முக்கிய அறிவிப்புகள் ஏதும் இடம்பெறுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடவடிக்கை எடுப்பேன்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது தொடர்பாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது:
எம்எல்ஏக்களை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையில்லை. சட்டசபைக்குள் வைத்து கைது செய்யவே சபாநாயகர் அனுமதி தேவை.
முதல்வரை அவமதிக்கும் வகையில் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியது தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மீது எழுத்துப்பூர்வ புகார் வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.
சட்டசபை கூடும் போது அதிமுக கொறடா குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். சட்டசபைக்குள் எதிர்க்கட்சியினர் ஏதும் சைகை காட்ட வேண்டுமானால் என்னிடம் முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறினார்.

Source link