டில்லி போராட்டத்தில் போலீஸ் தடியடி; லோக்சபாவில் விவாதிக்க சபாநாயகரிடம் ராகுல் கோரிக்கை

புதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கண்டனம் தெரிவித்தார்.

‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், பார்லி.,யை நோக்கி பேரணி செல்ல முயன்றதால், ஒட்டுமொத்த டில்லியே ஸ்தம்பித்தது. பல்வேறு இடங்களில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை பாதுகாப்பு படையினர் கலைத்தனர்.

இளைஞர்கள் மீதான தடியடி குறித்து பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்க கோரி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை காங்கிரஸ் எம்பி ராகுல் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். பிறகு பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது:

தேர்வு தொடர்பான நெருக்கடி குறித்து போராடும் மாணவர்கள் மீது போலீசார் அடக்குமுறை குறித்து சபாநாயகர் ஓம்பிர்லாவை நேரில் சந்தித்து இது குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். மாணவர்களின் பிரச்னையை பார்லிமென்டிற்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து எழுப்புவோம்.

நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறையை கரையான் அரிப்பது போல சிதைத்துள்ளனர். டில்லியில் நடந்த சம்பவத்திற்கு மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்களை அடித்து துன்புறுத்தும் இந்த அநாகரிகமான செயலை நிறுத்த வேண்டும். இவ்வாறு ராகுல் கூறினார்.

சந்திப்பு

டில்லியில் போராட்டம் நடத்திய போது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களை ராகுல் நேரில் சந்தித்தார். அவர் இளைஞர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

Source link