சென்னை: ஏஐ மனிதர்களின் வேலையை ஒருபோதும் பறிக்காது; இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா ஒரு பிச்சை எடுத்தது, அது தான் சுந்தர் பிச்சை. அவர் இல்லையெனில் கூகுள் இல்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: இந்த நொடி முதல் தமிழகத்தின் கல்வி மாறுகிறது. கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவோம். எந்த அளவிற்கு புத்தகப்பை சுமை குறைகிறதோ அந்த அளவிற்கு மாணவர்களின் மனச்சுமை குறையும். நிலாவுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூட குறைவாகத்தான் சுமை எடுத்துச்சென்றிருப்பார். அதனை விட பள்ளி மாணவர்கள் அதிகம் சுமக்கின்றனர். பாடப்புத்தகங்கள் வண்ணப்பட புத்தகங்களாக மாறும்.
குழந்தைகளுக்கான கல்வியாக தமிழக கல்வி முறையை மாற்ற இருக்கிறோம். கதைகளின் வழியே கணிதத்தை கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும். Prompt Engineering-ஐ பாடத்திட்டத்தில் கொண்டுவரப்போகிறோம். ஏஐ மனிதர்களின் வேலையை ஒருபோதும் பறிக்காது. இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா ஒரு பிச்சை எடுத்தது, அது தான் சுந்தர் பிச்சை. அவர் இல்லையெனில் கூகுள் இல்லை. ஏஐயை பார்த்து நாம் அச்சப்பட வேண்டாம். அது யாருடைய வேலையையும் பறிக்காது. Prompt Engineering-ஐ மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்பதை நாங்கள் கல்வித்திட்டத்தில் கொண்டு வர போகிறோம்.
நாம் எல்லோரும் சின்ன வயதில் நிலாச்சோறு சாப்பிட்டு இருப்போம். இஸ்ரோவின் உதவியோடு பள்ளிக்குழந்தைகள் செயற்கைக்கோளை உருவாக்க வேண்டும். அவர்கள் உருவாக்கக்கூடிய குட்டி குட்டி செயற்கைக்கோள்களும், நீங்கள் இஸ்ரோவில் இடம் அளித்தால், நமது அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்கள் சந்திரனை வட்டமிடும், இந்த தேசத்தை வட்டமிடும் அதற்கான கல்வித்திட்டத்தை நாங்கள் முன்னெடுத்து சென்று கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
